வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2 ஆண்டுகளாக பெரும் கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்து வந்த மெய்தெய் இனத்தைச் சார்ந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது
இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள். நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இதுவரையிலும் செல்லவில்லை என்பது எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டாகும். பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லத் தயங்குவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.