தொடர் விடுமுறை... இன்று முதல் தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Dinamaalai March 21, 2025 01:48 PM

இன்று முதல் தமிழகம் முழுவதும் ரமலான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 687 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலான பயணிகள் பயணிப்பார்கள். அதே போன்று பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிப்பார்கள். நாளை முதல் அடுத்தடுத்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக வரும் நிலையில், தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும் மக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 21ம் தேதி 270 பேருந்துகளும், நாளை 22ம் தேதி சனிக்கிழமை 275 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 22ம் தேதி சனிக்கிழமை தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்தில் இருந்து 21 மற்றும் 22ம் தேதிகளில் தலா 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.