இன்று மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உணவு வணிகர்களிடம், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் பேசுகையில், “குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் பெரும்பாலும் பாசிபடிந்து தான் இருக்கின்றன.
குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு முறையாவது குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் நிறுவனத்துக்கான உரிமம் பெற்றவர்கள் காலாவதி தேதியை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். உரிமம் காலாவதியாகி விட்டால் ஒவ்வொரு நாளும் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும். உதாரணமாக 2 மாதமாக உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றால் ரூ.6000 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தினால் அதன் பிளாஸ்டிக் தன்மை மாறிவிடும். அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும். குறிப்பாக குடிநீர் கேன்களில் உள்ள மூடிகள் சீல் செய்யப்பட்டு, அதில் மட்டும் தான் அழியாத மையில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் சிறிய வகை குடிநீர் பாட்டில்களில் குடித்துவிட்டு கசக்கி போட வேண்டும் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார்.