மற்ற மீன்களை காட்டிலும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மீன் தான் மத்தி மீன்.
நல்ல வாசனையும், சுவையும் கொண்ட இந்த மத்தி மீன் மற்ற மீன்களை காட்டிலும் விலையும் மலிவு. இதில் முள் அதிகமாக இருக்கும் என்பதால் சிலர் இதை வாங்க மாட்டார்கள். ஆனால், அதன் நன்மைகளை பற்றி தெரிந்தால் தேடிப்போய் வாங்குவீர்கள்.
மத்தி மீனில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.எனவே, நீரிழிவு இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது மத்தி மீனை சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், மத்தி மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமலும் தடுக்கலாம்.
மத்தி மீனில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.60 கிராம் மத்தி மீனில் 217 மி.கிராம் அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வரும்போது, எலும்பு வலு இழப்பு, மூட்டு வலி, பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.குறிப்பாக, கர்ப்பக்காலத்தில் இந்த மீனை சாப்பிட்டுவர தாய் மற்றும் சேய் இருவருக்கும் நிறைவான கால்சியம் சத்து கிடைக்கிறது.
மத்தி மீனில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.இதனால், இரத்த ஓட்டம் சீராகும், இதயத்திற்கு தேவையான இரத்தம் நிறைவாக கிடைக்கும், இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
அதேபோல், இரத்த அழுத்தத்தை குறைப்பதால் இதய நோயின் அபாயமும் குறைகிறது. எனவே, இதயத்தை பாதுகாக்க வாரம் 2 முறையாவது இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சியுங்கள்.
மத்தி மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது மனச்சோர்வு, மன அழுத்தம், டிமென்ஷியா போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
வாரம் 2 முறை மத்தி சாப்பிட்டுவர, மூளையில் டோபமைன் உற்பத்தி அதிகரித்து, மூளையை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.இந்த அமினோ அமிலங்கள் நரம்பு இழைகள் மற்றும் மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கின்றன. இதனால், நினைவாற்றலை மேம்படுகிறது.
மத்தி மீனில் உள்ள அதிகப்படியான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாரத்திற்கு 2 - 3 முறை மத்தி மீன் சாப்பிடுவர்களுக்கு சோரியாசிஸ், அடோபிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது, ஒருவேளை இருந்தாலும் குணமாகும்.
அதேபோல், இளம் வயதிலேயே தோல் சுருக்கம், பருக்கள் உடையவர்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெகு விரைவில் சுருக்கங்கள் நீங்கி மென்மையான பளபளப்பான சருமத்தை பெறலாம்.