தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க முடிவு!
Dinamaalai March 24, 2025 09:48 PM

தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்” என்றார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.