திருநெல்வேலி மாநகர ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர் கடந்த 18-ந்தேதி காலை பள்ளிவாசல் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று இவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில் இரண்டு பேர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும், ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இவர்களிடம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததில், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக பிளஸ்-1 மாணவன் மற்றும் மேலும் ஒருவரையும் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. அதாவது, அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.