புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கும் 25% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று புதுச்சேரி மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் துணை ஜனாதிபதியுடன் சந்தித்து கேட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தற்போது புது டெல்லியில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களாக துணை ஜனாதிபதியும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மதிப்பிற்குரிய ஜகதீப் தங்கரை சந்தித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கும் 25% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது நாம் இதுகுறித்து விரிவாக பேசலாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கிறேன் என துணை ஜனாதிபதி கூறினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் புதுச்சேரி பாராளுமன்ற மேலவை உறுப்பினர் செல்வகணபதி அவர்களுடன் சென்று மேதகு துணை ஜனாதிபதியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் ஆரம்பித்த சமயத்தில் எட்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் பின்னர் 21 படிப்புகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.. அதன் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்றைய தினம் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 51 துறைகளில் 158 பட்ட மேற்படிப்புகளும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.
ஆனால் இந்தப் படிப்புகளுக்கு புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது என்றும் இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு 2013 முதல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் விரிவாக எடுத்துரைத்தார்கள். புதுச்சேரி மாணவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு இல்லாத சூழ்நிலையில் அவர்கள் அகில இந்திய மாணவர்களுடன் போட்டியிட்டு படிப்புகளில் சேர வேண்டிய சூழல் உள்ளது.
ஆகையால் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தற்சமயம் உள்ள அனைத்து நிலை படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் திரு. வைத்திலிங்கம் அவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் திரு. செல்வகணபதி அவர்களும் விரிவாக எடுத்துரைத்து அது சம்பந்தமாக ஒரு கடிதத்தையும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையிலும் மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்கள். இது விஷயமாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரிடம் பேசி தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக மேதகு துணை ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்கள். துணை ஜனாதிபதி இந்த விஷயத்தில் விரைவாக செயல்பட்டதற்கு வைத்திலிங்கம் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.