தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களுக்கு அடுத்தபடியாக திரையில் சாதனை படைத்தவர்கள் என்றால் கமலும், ரஜினியும்தான். கமல், ரஜினி படங்கள் வரும் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜியின் படங்கள் குறைந்து விட்டன. அதே நேரம் எம்ஜிஆர் முதல்வர் ஆகி விட்டார். அந்த நேரத்தில் பல படங்கள் சாதனை படைக்கும்போதெல்லாம் தவறாமல் பாராட்டு விழாவுக்கும் சென்று விடுவார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரை பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மோகத்தால் திரைப்படக் கல்லூரியில் படித்து சினிமாவில் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் பல்வேறு அவமானங்களை சந்தித்தபோதும் அவர் தனது அசாத்தியமான திறமையால் முன்னுக்கு வந்து சூப்பர்ஸ்டார் ஆனார். ஆரம்பத்தில் கமல் படங்களில் வில்லனாகவே தொடர்ந்து நடித்தார்.
நினைத்தாலே இனிக்கும் படத்திற்குப் பிறகு கமல் இனி நாம் தனித்தனியாகவே நடிப்போம் என்று சொன்னாராம். அதுதான் நம் வளர்ச்சிக்கு நல்லது என்று சொன்னதும் நண்பனின் அறிவுரையைக் கேட்டு ரஜினியும் தனியாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் பைரவி படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தைக் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கொடுத்தார்.
தொடர்ந்து அவரது படங்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்புக்குள்ளாயின. அந்த வகையில் ரஜினி காந்த் நடித்த முள்ளும் மலரும், ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல் படங்கள் அவரது நடிப்புக்குத் தீனி போட்டன. இருந்தாலும் கமர்ஷியல் பாதைக்கு அவரைக் கொண்டு வந்த படம் என்றால் அது முரட்டுக்காளை தான்.
இந்தப் படத்தில் ஆரம்பத்தில் அவரது ஓபனிங் சாங்கான ‘பொதுவாக எம் மனசுத் தங்கம்’ பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட்டாகி வருகிறது. இந்தப் படத்திற்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் எம்ஜிஆரே இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி இப்படி சொல்கிறார்.
1980ல் முரட்டுக்காளை படம் வெளியானது. அந்த நேரத்தில் படத்தின் வசூல் பல சாதனைகளைப் படைத்தது. அந்த சமயத்திலேயே படத்திற்கு 300 ரூபாய் வரை டிக்கெட் விலை வைத்து விற்றார்களாம். அப்போது படத்தின் வசூலை வாங்கி பார்த்த நடிகர் எம்ஜிஆர் இப்படியெல்லாம் நான் பார்த்ததே இல்லை. இவர் இப்படி பின்றாரேன்னு சொன்னார் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி.