#featured_image %name%
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
கனக குண்டல நியாய: – கனகம் – பொன், குண்டலம் – காதில் அணியும் நகை.
வேதாந்த பரிபாஷையை எளிதாகப் புரிந்து கொள்வதற்காக முனிவர்கள் அளித்த பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.
வேதாந்த நூல்களில், காரியத்திற்கும் காரணத்திற்குள் இடையேயான தொடர்பைக் குறிப்பதற்கு ‘கனக குண்டல நியாயத்தை முனிவர்கள் பயன்படுத்துவார்கள். இது ஒரு அற்புதமான சிந்தனை.
‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிடத வாக்கியம் கூறும் செய்தி, ‘இந்த உலகம் அனைத்தும் ஈஸ்வரன் மயம்’ என்பது. அதேபோல், நான்கு மகாவாக்கியங்களான ப்ரக்ஞானம் ப்ரஹ்மா (ருக்வேதம்), அஹம் ப்ரஹ்மாஸ்மி (யஜுர் வேதம்), தத்வமசி (சாமவேதம்), அயமாத்மா ப்ரஹ்மா (அதர்வண வேதம்) ஆகிய இவற்றை சீடர்களுக்கு உபதேசிக்கும் போது, ‘கனக குண்டலம், கட ம்ருத்திகம் (மண் பானை)’ போன்ற நியாயங்களை எடுத்துக்காட்டுவார்கள்.
ஒரு இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதில் கிளைகளும், மலர்களும், காய்களும் நிறைந்திருந்தன. அந்த மரத்தின் இருப்பிற்கு முக்கியமான காரணம் என்ன? இந்தக் கேள்வியைக் கடைந்துத் தேடினால், அந்த மண்ணில் புதைந்த விதைதான் காரணம் என்பது புரியவரும்.
அதே போல் இந்த சிருஷ்டி உள்ளது. கண்ணுக்குத் தென்படுகிறது. அதனால் யாரோ ஒருவர் இதனைப் படைத்திருக்க வேண்டும். இந்தச் சிந்தனை நம் முனிவர்களுக்கு ஏற்பட்டது. அந்த யோசனையில் இருந்து உற்பத்தியானதே ‘காரண, காரிய சம்பந்தம்’ என்ற சித்தாந்தம். இது அத்தனை எளிதாகப் புரியக் கூடிய விஷயம் அல்ல. அதனால்தான் பல வித உதாரணங்களோடு குருமார்கள் பாடம் நடத்தினார்கள்.
வேதாந்த நூல்கள், இந்த ‘காரிய, காரண’ விளக்கத்தை மூன்று விதமாகப் பிரித்தன.
ரிஷிகள் இந்த சித்தாந்தத்தை அழகாக விளக்கியுள்ளார்கள். சிருஷ்டி மொத்தமும் ஒரே பதார்த்தத்தில் இருந்து புனையப்பட்டது. அதுவே பிரம்மம்.
‘இந்த்ரோ மாமுபி: புருரூப ஈயதே’ – (ருக்வேதம், 6-47-18)
சிருஷ்டி நடப்பதற்குப் பதார்த்தம் வேண்டுமல்லாவா? படைப்பிற்கு முன்பே பதார்த்தம் எங்கிருந்து வந்தது? தர்ம சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது,
‘யதா லூதா தந்துகார்யம் ப்ரதி ஸ்வப்ரதானதயா நிமித்தம் ஸ்வஸரீர ப்ரதானதயோபாதானம் ச பவதி’ – (வேதாந்த சாரம் 56)
பொருள் – சிலந்திப் பூச்சி தன் வாயிலிருந்து வெளிவரும் நூலைக் கொண்டு கூட்டைப் பின்னுகிறது. அதாவது, ‘நிமித்தம் (நோக்கம்), உபாதானம் (காரணம்) இரண்டும் ஒன்றே.
படைப்பு எவ்வாறு தொடங்கியது ?
‘ஏகோஹம் பஹுஸ்யாம:’ – ‘ஒன்றேயாகிய நான் அனேகமாக ஆவேனாக’. என்ற இறைவனின் விருப்பம் படைப்புக்குக் காரணமானது. தன் சங்கல்பத்தால் பரபிரம்மம் படைப்பைச் செய்தார் என்று வேத ரிஷிகள் கண்டுணர்ந்தார்கள்.
சிருஷ்டியை எதைக் கொண்டு நியமித்தார்? ஒரு ஜடப் பொருள், மற்றொரு ஜடப் பொருளைப் படைக்க முடியாது. மண்ணைப் பானையாக மாற்றிய குயவன், சைதன்யம் நிரம்பிய மனிதன். பொன்னைக் குண்டலமாக மாற்றிய பொற்கொல்லன், சைதன்யம் நிரம்பிய மனிதன். ஆனால், பரப்ரம்மம் படைத்தது, படைத்தவனிடமிருந்து வேறுபட்டது அல்ல. குண்டலமும் பொன்தான். குண்டலத்திலிருந்து பொன்னை நீக்கி விட்டால்? பானையில் இருந்து மண்ணை நீக்கி விட்டால்? என்ன மிஞ்சும்?
நம்முடைய பெயரையும், உருவத்தையும் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது சரியல்ல என்று கூறும் சித்தாந்தத்தை, இன்னும் கொஞ்சும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக வந்தது இந்த ‘கனக குண்டல நியாயம்’ என்ற உதாரணம்.
எல்லா இடத்திலும், எப்போதும் வணங்கப்படும் இறைவன், ‘என் சொரூபமே’ என்று புரிந்து கொள்வது மிகவும் கடினம். பொன், பலவித ஆபரணங்களாகத் தோற்றமளிப்பது போல, பிரம்மமே, சகல ஜீவராசிகளிடமும் தோற்றமளிக்கிறார் என்னும் உணர்வைப் பெற வேண்டும் என்று இந்த நியாயம் கற்றுத் தருகிறது.
இந்தப் புரிதலால் படைப்பின் மீது அளவுக்கதிகமான கருணை ஏற்படுகிறது. உடல் உணர்வு நீங்கி, பயமற்றவர் ஆகிறோம். ‘பிரம்மமே நான்’ என்று அறிந்தவர், பிரம்ம ஞானியாகிறார்.
நகை சத்தியமல்ல. அது மித்யை. உண்மையில் இருப்பது பொன்தான். ‘நான் பிறந்து, மறையும் உடல் அல்ல. நான் பரமாத்வாவின் அம்சம். நான் பரிபூரணமானவன்’. என்ற புரிதல் சுகத்தையும் அமைதியையும் அளிக்கும். ‘கனக குண்டல நியாயம்’ முக்திக்கு வழி காட்டக் கூடிய வேதாந்தப் பாடத்தைப் புரியச்செய்கிறது.
காரணம் ஒன்றுதான். காரியங்கள் பல –
மண் ஒன்றுதான். பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பானை, சட்டி, மடக்கு முதலானவை. அதேபோல் பொன் ஒன்றுதான். குண்டலம், மோதிரம், வளையல், ஒட்டியாணம் என்று ஆபரணங்கள் பல.
பெயர், உருவம் என்ற மாயையில் சிக்கி, நாம் ஆபரணங்களின் அழகை கவனிக்கிறோமே தவிர, கடைக்காரருக்கு அவை எல்லாம் பொன் என்ற புரிதல் எப்போதும் இருக்கும். இருக்க வேண்டும் கூட.
இவ்விதம், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைகளில் இருந்து பொன்னை எடுத்து விட்டால், மீதியிருப்பது சூன்யமே.
News First Appeared in