சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!
Webdunia Tamil March 26, 2025 05:48 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றி விழாவை தொடங்குகிறார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நாட்களில் தினசரி வழக்கமான பூஜைகள் மற்றும் உத்சவ பலி ஆகியவை சிறப்பாக நடத்தப்படும். ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்வு நடைபெறும்.

விழாவின் கடைசி நாளான ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

மேலும், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு பண்டிகை ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.