'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?
Vikatan March 26, 2025 05:48 PM

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் என்பது இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்த தரவுகளை பதிவு செய்யும் ஒரு தரவுத்தளம் ஆகும்.

கடந்த ஆண்டில் இருந்து, இந்தத் தரவுத்தளத்தில், நேரம், எப்படிப்பட்ட விபத்து, எதனால் விபத்து போன்ற 15 விஷயங்களை குறிப்பிட்டு, சாலை விபத்து குறித்த தகவல்கள் பதியப்படுகின்றன. 'அப்போது தான் சாலை விபத்தின் முக்கிய காரணத்தை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியும்' என்பது திட்டம்.

விபத்தை தடுக்க 'இந்தத்' தரவுத்தளம்

அப்படி பதியப்பட்டதில் இருந்து தான், இந்தியளவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் ஏற்படும் விபத்து தமிழ்நாட்டில் தான் அதிகம் ஏற்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோருக்கு சிறையும், அபராதமும்...

2022-ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டர் வாகன வழிகாட்டுதல்களின் படி, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் வாகனம் ஓட்டி எதாவது விபத்து நேர்ந்தால், அவர்களது பெற்றோர்கள் மூன்று ஆண்டு சிறையும், ரூ.25,000 அபராதத்தையும் ஏற்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறை கடுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பது இந்த விபத்து அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், பெரும்பாலும் அபராதம், எச்சரிக்கை, பெற்றோரிடம் தகவலை தெரிவிப்பது என்பதுடனே போலீஸார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிடுகின்றன. வாகனங்களை பறிமுதல் செய்வதில்லை.

லேர்னர் லைசன்ஸ்

இன்னொரு பக்கம், லேர்னர் லைசன்ஸ் 16 - 18 வயதிலேயே கிடைத்துவிடுகிறது. இதை வைத்துகொண்டு பலர் தப்பித்து விடுகின்றனர். இந்த விபத்துகளை கட்டுபடுத்த இந்த வயதினையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.