வீட்டிலேயே உடைந்த பனிக்குடம்... தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
Dinamaalai March 29, 2025 07:48 PM

சீனாவைச் சேர்ந்த ஃபுஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்துள்ளார். அவர் தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த தகவல் சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதை, 92 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்வையிட்டு சிறுவனின் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில், இதுகுறித்து சிலர் எதிர்வினையாற்றியும் உள்ளனர். “அந்தப் பெண் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் தனியாக விடப்பட்டார்” எனவும் "இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றல்ல. பிரசவம் மற்றும் குழந்தை பிறக்கவிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எப்படி வீட்டில் தனியாக விட முடியும்? கணவன் மற்றும் மாமியார் மிகவும் பொறுப்பற்றவர்களாகத் தெரிகிறது" என விமர்சனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஷான்டாங் மாகாணத்தில் மகப்பேறு செவிலியரான ஜாங் ஃபஞ்சு, "வீட்டுப் பிரசவங்கள் ஆபத்தானவை. குடும்ப உறுப்பினர்கள் பெண்ணின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.