சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் திடீரென பிரசவ வலியில் துடித்த தாயாருக்கு, 13 வயது சிறுவன் பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய் கடும் வலியில் அவதி பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த 13 வயது சிறுவன் அவசர உதவிக்கான மையத்தை அழைத்து உதவி கேட்டுள்ளார்.
அப்போது, “மாமா, பாப்பாவின் தலையை நான் பார்த்துவிட்டேன், என்னுடைய அம்மாவுக்குப் பயமாக இருக்கிறது” என பராமரிப்பாளரான சென் சாவ்ஷுனிடம் கூறியுள்ளார். அம்புலன்ஸ் வரும்போது வரை, தொலைபேசி வழியாக சென் சிறுவனை வழிகாட்டி, தாயாரை எவ்வாறு உட்கார வைத்து அமைதியாக வைத்திருக்க வேண்டும், குழந்தையை எப்படிச் சீராக வெளியே எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழிகாட்டலின் படி சிறுவன் ஒரு சுகப்பிரசவத்திற்கான நிபுணராக செயல்பட்டு, தனது தாய் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளார். இதனையடுத்து குறுகிய நேரத்திலேயே மருத்துவ குழுவினர் வந்து தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் சீன சமூக வலைதளங்களில் 92 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. பலர் அந்த சிறுவனின் சிந்தனை திறனை, அமைதியாக செயல்பட்ட தன்மையை புகழ்ந்தனர். “இந்த சிறுவன் தன்னுடைய தம்பியிடம், ‘உன்னை உலகத்திற்கு கொண்டு வந்தது நான்தான்’ என்று பெருமையாக சொல்லக்கூடியவன்” என ஒருவர் கூறினார்.
இருப்பினும், சிலர் இந்தக் குடும்பம் எப்படி ஒரு கர்ப்பிணி பெண்ணையும் சிறுவனையும் வீட்டில் ஒருங்கே விட்டுவிட்டது என கடுமையாக விமர்சித்தனர். “இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் இல்லை, இது பொறுப்பற்ற குடும்பத்தின் தளர்வாகும்” என ஒருவர் சாடினார்.