கேரளாவின் பா.ஜ., தலைவராக தேர்வான ராஜிவ் சந்திரசேகருக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவை பூர்விகமாகி கொண்ட இவர் கர்நாடகாவில் இருநது மூன்று முறை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். அத்துடன், மோடியின் முந்தைய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களம் இறங்கினார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ராஜிவ் சந்திரசேகர் வென்றுவிடுவார் என்று கட்சியினர் உறுதியாக நம்பிய நிலையில், இறுதியில் சசி தரூர் வெற்றி பெற்றார்.
தேர்தலில் தோல்வியுற்றதால் ராஜிவ் சந்திரசேகருக்கு பதவி எதுவும் தரப்படவில்லை. அவருக்கு கேரளா மாநில பா.ஜ., தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை எடுத்த முடிவின்படி அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.
இந்நிலையில், ராஜிவ் சந்திரசேகருக்கு அவர் எதிர்பாராத வகையில், சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சசி தரூர், 'பா.ஜ.,வின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். மீண்டும் உங்களுடன் போர்க்களத்தில் மோதுவதற்காக காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.