சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண், திருடன், திருடன் என சத்தம் போட்டப்படியே பைக்கை துரத்தினார். பைக்கில் வந்த கொள்ளையர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களின் முகம் தெரியவில்லை. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் அடையாறு சாஸ்திரி நகரில் இன்னொரு பெண்ணிடம் செயின் பறிப்புச் சம்பவம் நடந்தது. அதன் பிறகு கிண்டி மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிக்கப்பட்டது. அடுத்து சைதாப்பேட்டையில் பெண்ணிடம் ஒரு சவரன் தங்க செயினும் வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனால் அடையாறு காவல் மாவட்ட போலீஸாரின் வாக்கி டாக்கிகள் அலறத் தொடங்கின.
செயின் பறிப்புதென் சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அந்த மாவட்ட போலீஸார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். அதோடு தனிப்படையிலிருக்கும் போலீஸாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி-க்களையும் போலீஸார் அலசி ஆராய்ந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவர் இந்த செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது வடமாநிலக் கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
அதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் தனிப்படை போலீஸார் கண்காணித்தனர். அப்போது சிசிடிவி-யில் பதிவான இருவரின் டிரஸ், ஷு அணிந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் வாங்க வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் தனிப்படை போலீஸார், உடனடியாக இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்தான் சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் அப்போது அவர்களின் பெயர் ஜாபர், சுராஜ் எனத் தெரியவந்தது. உ.பி-யைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ரயில் மூலம் சென்னை வந்திருக்கிறார்கள். பின்னர், பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்து அடையாறு பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது தனியாக வந்த பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். 7 பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட அவர்கள், ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்த விமானங்கள் மூலம் தங்களின் ஊருக்கு தப்பிச் செல்ல விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள்.
விமான நிலைய பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய இருவரும் போர்டிங் பாஸ் வாங்க சென்றபோதுதான் சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் இரானிய கொள்ளையர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``இந்தச் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவன், கடந்த ஜனவரியில் தாம்பரம் பகுதியில் நடந்த செயின் பறிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவன். அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். இரானிய கொள்ளையர்களைப் பொறுத்தவரை கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். தங்கம் விலை உச்சத்திலிருப்பதால் வடமாநிலங்களிலிருந்து ரயில், விமானம் மூலம் தமிழகம் வந்து கொள்ளையடிப்பதை இந்தக் கொள்ளைக் கும்பல் வாடிக்கையாக வைத்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.