கடந்த 2023 ஏப்., 1-ல் 'மகிளா சம்மான் சேமிப்பு' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குறைந்தது, 1,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரை வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம். மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதமாகவும் பணம் செலுத்தலாம். மொத்தமாக 2 லட்சமும் முதலீடு செய்யலாம்.
அதற்கு, ஆண்டுக்கு 7.5 சதவீதம் நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட வங்கிகள், தபால் அலுவலகங்களில் முதலீடு செய்யலாம். பொருளாதார ரீதியாக பெண்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சேமிப்பு திட்டத்தில் போடும் வைப்பு நிதியில் இருந்து 40 சதவீதம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும், 31ம் தேதிக்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கும். தபால் துறை ஊழியர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் பேங்கிங் முறையில் பணம் எடுக்கும் இந்த திட்டமானது, கடந்த 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தபால் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ. 2 லட்சம். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும். மகளிர் மதிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5 சதவீதமாக உள்ளது. கூட்டு வட்டி விகிதத்தில் காலாண்டு தோறும் கணக்கிடப்படும்.
கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதத் தொகையில் திரும்பப் பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்போர் அல்லது பாதுகாவலரின் மரணம் மற்றும் தீவிர மருத்துவ காரணங்களால் இக்கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு முடித்து கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது