கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன?
BBC Tamil March 27, 2025 03:48 PM
X/@KKRiders

அசாம் மாநிலம் குவாஹட்டியில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2025 ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான் அணி சேர்த்த ஸ்கோர்தான் மிகக்குறைவானதாகும்.

இந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 2 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைவிட்டு மேலே வரவில்லை, மைனஸ் 0.308 என்ற ரீதியில்தான் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிலும் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.882 என்று மோசமான நிலையில் இருக்கிறது

X/@KKRiders மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார் வெற்றிக்கு காரணமான பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணியில் வலிமையான சுழற்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் சுனில் நரேன் நேற்று விளையாடாத நிலையிலும் ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது. சுனில் நரேனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார்.

தமிழகத்தின் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என அழைக்கப்படும் வருண் சக்கிரவர்த்தி வழக்கம்போல் சிறப்பாக விளையாடி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தினர்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும்பகுதி காரணம் பந்துவீச்சாளர்கள். தங்களுக்கு இடப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து 151 ரன்களுக்குள் சுருட்டினர்.

டீகாக் மட்டுமே போதும்

இந்த இலக்கை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டீகாக் சிறப்பாக பேட் செய்தார். நீண்ட காலத்துக்குப்பின் அற்புதமான ஆட்டத்தை டீ காக் வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியபின் இப்போது அதே வேகத்தில் நேற்று பேட் செய்தார்.

61 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்களுடன் இறுதிவரை குவின்டன் டீ காக் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரஹானே (18), மொயின் அலி (5) ரன்கள் சேர்த்தனர். 'இம்பேக்ட் ப்ளேயர்' ரகுவன்ஷி 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

X/@KKRiders மொயின் அலி மொயின் அலிக்கு எதிர்பாரா பணி

இங்கிலாந்து அணியில் இருந்தபோதுகூட மொயின் அலி தொடக்கவீரராக பெரும்பாலும் களமிறங்கியது இல்லை, நடுவரிசை, ஒன்டவுனில் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்தபோதும், ஆர்சிபியில் இருந்தபோதும் நடுவரிசைதான் இவருக்குரிய இடம். ஆனால், நேற்று தொடக்க வீரராக மொயின் அலிக்கு கொடுக்கப்பட்ட பணியால் அவர் தடுமாறியது போன்றே தெரிந்தது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் படுமோசமாக பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவரின் பந்துவீச்சையே எதிர்கொள்ள மொயின் அலி தடுமாறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸருக்கும், ஷார்ட் பந்துக்கும் மொயின் அலி ரன்களைக் குவிக்க யோசித்தார். ஒரு கட்டத்தில் தூக்கி அடித்தாலும் யாரும் பிடிக்க முடியாத இடத்தில் விழுந்தது. களத்தில் இருந்த மொயின் அலி 12 பந்துகளில் 5 ரன்களுடன் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

டீகாக் அதிரடி ஆட்டம்

ஆனால், நிதானமாக ஆடத்தொடங்கிய டீகாக் வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் கொல்கத்தா 40 ரன்களையும், 7.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. டீ காக் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். 12.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது.

கேப்டன் ரஹானே முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறினார், கடைசியில் 18 ரன்னில் ஹசரங்கா விக்கெட்டை இழந்தார்.

குவாஹட்டியில் இரவில் பனிப்பொழிவு இருந்ததையடுத்து, 11வது ஓவரில் புதிய பந்து கொண்டுவரப்பட்டது. இந்த விதி இந்த சீசனில் கொண்டுவந்தபின முதல்முறையாக பந்து மாற்றப்பட்டது. பனிப்பொழிவு சற்று தொடங்கியபின் கொல்கத்தாவின் வெற்றி இன்னும் எளிதாகியது.

3வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, டீகாக் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 44 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டீகாக் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை அடிக்கவிடாமல் ஆர்ச்சர் தேவையின்றி இரு வைடு பந்துகளை வீசி டீகாக் சதம் அடிப்பதைத் தடுத்தார். இருப்பினும், கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார்.

Getty Images கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார் ரஹானே என்ன கூறினார்?

முதல் வெற்றிக்குப்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினோம், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் மொயின், வருண் அற்புதமாக செயல்பட்டனர். நரேன் இல்லாத நிலையில் மொயின் பந்துவீச்சில் நிரப்பினார். பந்துவீச்சாளர்களின் பணி சிறப்பாக இருந்தது வெற்றியை எளிதாக்கினர்.

விக்கெட் எடுக்க வேண்டும் என்று மொயினிடம் தெரிவித்தேன், அதை செய்துவிட்டார். மொயின் அலிக்கு முழு சுதந்திரம் அளித்தோம், ஆனால் பேட்டிங்கில் எதிர்பார்த்தவகையில் செயல்படவில்லை. ஆனால், பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்" எனத் தெரிவித்தார்

குழப்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தற்காலிகக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரியான் பராக் நேற்று அபத்தமாக கேப்டன்சி செய்து வர்ணனையாளர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போன்று, கேப்டன்சி செய்கிறார் என்று வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

எந்த பேட்டரை எந்த வரிசையில் களமிறக்குவது, எந்த பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்துவது, எந்த பேட்டருக்கு எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படை தெரியாமல் நேற்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் செயல்பட்டதை நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள்.

ரியான் பராக் வழக்கமாக நடுவரிசையில்தான் களமிறங்குவார் நேற்று ஒன்டவுனில் களமிறங்கினார். தொழில்முறை பேட்டர் இல்லாத ஹசரங்காவை நடுவரிசையில் களமிறக்கி, கடந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெலை 6-வது பேட்டராகவும், அதிரடி பேட்டர் ஹெட்மெயரை 8-வது வரிசையில் களமிறக்கினார்.

ஹெட்மெயரை 4வது வீரராகவும், துருவ் ஜுரெலை 3வது வீரராகவும், ரியான் பராக் 6வது அல்லது 5வது வீரராக களமிறங்கி இருக்கலாம். ஷுபம் துபே சிறந்த பேட்டர், அவரை நடுவரிசையில் களமிறக்கியதற்குப் பதிலாக 3வது வரிசையில் களமிறக்கி இருக்கலாம்.

இங்கிலாந்து முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான நிக்நைட் கூறுகையில், "எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஹெட்மெயர் அணியில் இருந்தால் அவரை ஏன் விரைவாக களமிறக்கவில்லை. உலகளவில் டாப் குவாலிட்டி பேட்டர் ஹெட்மெயர் அதிரடி ஆட்டக்காரர். அவரை விரைவாக களமிறக்கி இருந்தால் ஆட்டம் மாறியிருக்கும், அதிக ரன்கள் கிடைத்திருக்கும், ஆட்டத்தைத் திருப்பத்தானே அவரை வைத்துள்ளீர்கள். ஹெட்மெயரை கடைசி வரிசையில் களமிறக்கி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?" என காட்டமாக விமர்சித்தார்.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த 5 போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் 200 ரன்களை இலக்காக வைத்து விளையாடுகின்றன. முடிந்தவரை பேட்டர்களை 8வது வரிசை அல்லது 9வது வரிசையில் வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், ராஜஸ்தான் அணியில் 8 பேட்டர்கள் வரை இருந்தும் குழப்பமான சூழலில் பேட்டர்கள் களமிறங்கியதால்தான் தங்களுக்குரிய ரோல் தெரியாமல் ஆட்டத்தைத் தவறவிட்டனர்.

Getty Images மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார் ஒரு அரைசதம் கூட இல்லை

ராஜஸ்தான் அணியில் சாம்ஸன்(13), ஜெய்ஸ்வால்(29), நிதிஷ் ராணா(8) ரியான் பராக்(25), ஹெட்மெயர்(7), துருவ் ஜூரெல்(33), ஷூபம் துபே(9) என இத்தனை பேட்டர்கள் இருந்தும் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை, எந்த பார்ட்னர்ஷிப்பும் அரைசதத்தை கடக்கவில்லை.

சாம்ஸன் அடித்து ஆடும் முயற்சியில் வைபவ் அரோரா பந்துவீச்சில் க்ளீன்போல்டானார். கேப்டன் ரியான் பராக் 3 சிக்ஸர்களை விளாசிவிட்டு வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தவரை நம்பிக்கை இருந்தது. ஆனால், மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடருக்குப்பின் ஜெய்ஸ்வால் சுழற்பந்துவீ்ச்சில் முதல்முறையாக விக்கெட்டை இழந்தார்.

கடந்த சீசனில் அஸ்வினை பயன்படுத்திய 5வது இடத்தில், ஹசரங்காவை பிஞ்ச் ஹிட்டராக பயன்படுத்த ராஜஸ்தான் அணி முயன்றது. ஆனால் முற்றிலும் தோல்வியாக முடிந்தது. வருண் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹசரங்கா ஆட்டமிழந்தார்.

67 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டாப்ஆர்டரின் 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கிலும் 25 ரன்களைக் கடக்கவில்லை, பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. சொந்த மண்ணில் ஆடியபோதும், ரியான் பராக்கால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.