விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நேற்று பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்ட நிலையில், மற்றொருவர் பைக்குடன் சிக்கினார்.
இது குறித்து உடனடியாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், சென்னை, மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) என தெரிய வந்தது.
அவரை சோதனை செய்த போது, சிறிய ரக துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எதற்காக துப்பாக்கியுடன் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்? எதிரிகள் யாரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஆரோக்கியம் ஜான் போஸ்கோ (44) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.