சோகம்... போதையில் டிரான்ஸ்பார் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து மரணம்!
Dinamaalai March 27, 2025 09:48 PM


தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த சதாசிவம் மகன் வினோத்குமார் (30). கூலித்தொழிலாளி இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால், இவர் அடிக்கடி மது போதையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் வந்து படுத்துக்கொள்வாராம். 

இந்நிலையில் நேற்று மாலையில் மதுபோதையில் இருந்த வினோத்குமார் வழக்கம்போல துணை மின்நிலைய வளாகத்திற்குள் சென்றவர், போதை மயக்கத்தில் மின்மாற்றி மீது ஏறினாராம். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

பின்னர் மின்மாற்றியில் உயிரிழந்த நிலையில் கிடந்த வினோத் குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே கொண்டுவந்தனர். பின்னர், அந்த உடலை வடபாகம் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து  வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, தூத்துக்குடி நகர் பகுதியில் சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.