நாமக்கல்லில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கடந்த மார்ச் 26ல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகா ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரம் லாரிகளை துறைமுகத்தில் இருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது; மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மாற்று ஓட்டுனர் அல்லது கிளீனர்கள் இல்லாதபட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்; ஏதேனும் சிறு விபத்து ஏற்பட்டால் அந்த லாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு டெண்டரில் பங்கேற்க முடியாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்கமுடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் மார்ச் 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.
இந்நிலையில் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹெச்.பி.சி.எல் (HPCL),இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது.
வேலை நிறுத்தம் போராட்டம் குறித்து தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் பேச்சு வார்த்தையில் நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.