இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாந்த்கபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. 2017ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாக தெரிகிறது. கணவர் பப்லுக்கு இந்த விஷயம் தெரிய வந்து மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழி தெரியாத கணவர் பப்லு, மனைவி ராதிகாவை, அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். பின்னர் அங்குள்ள கோயிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் முன்பு அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். திருமணம் முடிந்ததும், பப்லு ராதிகாவிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்லார். அவரும் சம்மதம் தெரிவிக்க, குழந்தைகளை பப்லு அழைத்துச் சென்றார். தமிழ் சினிமாவில் மனைவியை காதலனுடன் இணைத்து வைப்பதாக அந்த 7 நாட்கள் படத்தை எடுத்திருப்பார். அதில் பாக்கியராஜ் ‘என்னோட காதலி உங்களோட மனைவி ஆகலாம்.. ஆனால் உங்களோட மனைவி என்னோட காதலி ஆகாது’ என்று பாக்கியராஜ் பேசி முடிப்பார். இது கொஞ்சம் ஓல்டு க்ளைமேக்ஸ் தான் ஆனால் கோல்டு என அழுத்தமாக பதிவு செய்வார்.
இருப்பினும் அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் ஒரு விவாதத்திற்கு உட்பட்டதே. கலாச்சாரத்தின் தன்மையை கருதி பாக்கியராஜ் அந்த க்ளைமேக்சை எழுதி இருப்பார். ஆனால், ஒருவேளை பாக்கியராஜ் உடன் அம்பிகா இணைந்து வாழ்ந்திருந்தாலும் அதிலும் தவறேதும் இல்லை. இது சிக்கலான விஷயம் தான். இரண்டு முடிவிலும் அர்த்தம் இருக்கிறது. அப்படியான ஒரு க்ளைமேக்ஸ் தான் தற்போது உத்திரப்பிரதேசத்தில் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது.