மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?
BBC Tamil March 28, 2025 08:48 PM
Getty Images மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் (இடது) நடிகர் மம்முட்டிக்காக சமரிமலையில் பிரார்த்தனை செய்தது சர்ச்சையானது

மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது நண்பரும் நடிகருமான மம்முட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மோகன்லால் சபரிமலையில் மம்முட்டிக்காக 'உஷா பூஜை' செய்தார்.

மம்முட்டி ஓர் இஸ்லாமியர் என்பதால் சிலர் மோகன்லாலை விமர்சிக்கின்றனர். மம்முட்டியின் மதம் அவரை அல்லாவை தவிர வேறு எங்கும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பலர் அவர்களுக்கு இடையிலான நட்பைப் புகழ்ந்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் விமர்சிப்பவர்களை சிறுமதி படைத்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு விவகாரம் என்ன?

தனது திரைப்படம் 'எல்2: எம்புரான்' வெளியாவதற்கு முன்பாக மார்ச் 18ஆம் தேதி மோகன்லால் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குச் சென்றுள்ளார். இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 27 அன்று வெளியானது.

அவர் சென்று வந்த பின்னர் அவர் நடத்திய பூஜையின் ரசீது வைரலாக பரவியது. அதில் மம்முட்டியின் இயற்பெயர் 'முகமது குட்டி' எனக் குறிப்பிடப்பட்டு அவரது நட்சத்திரம் 'விசாகம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவசம் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரசீது, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மம்முட்டிக்காக மோகன்லால் பிரார்த்தனை செய்ததைக் காட்டுகிறது.

மம்முட்டி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாக சில ஊடக செய்திகள் தெரிவித்தாலும் அவரது குழுவினர் இதை மறுத்துள்ளனர்.

மம்முட்டிக்காக மோகன்லால் பிரார்த்தனை செய்ததைச் சிலர் நியாயப்படுத்துகின்றனர். ஆனால் ஒரு தரப்பினர் அதை விமர்சிக்கின்றனர்.

KERALA TOURISM தனது திரைப்படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் மோகன்லால் பிரார்த்தனை செய்தார்

சமூக ஊடக பிரபலமும் மதியமம் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஓ அப்துல்லா ஒரு ஆடியோ செய்தியில், தன் சார்பில் பிரார்த்தனை செய்ய மோகன்லாலிடம் மம்முட்டி கேட்டிருந்தால் அவர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

"மம்முட்டிக்கு இதுகுறித்துத் தெரிந்திருந்தால், அவர் மன்னிப்பு கோர வேண்டும். அவர் இஸ்லாமிய சமூகத்தினரிடம் மன்னிப்பு கோர வேண்டும். இது அந்த நடிகரின் தரப்பில் மிகத் தீவிரமான தவறு. மம்முட்டிக்கு தெரியாமல் மோகன்லால் பிரார்த்தனை செய்திருந்தால், அதில் தவறு ஏதும் இல்லை," என அவர் தெரிவித்ததாக நியூஸ் 18 என்ற செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

"மோகன்லாலுக்கு ஐயப்பன் மீது அதிக நம்பிக்கையுள்ளது. அவர் தனது நம்பிக்கையால் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் இதை அவர் மம்முட்டியின் அறிவுரைப்படி செய்திருந்தால் அது மிக மோசமான தவறு. இஸ்லாமிய விதிகளின்படி ஒருவர் அல்லாவை தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக்கூடாது," என அப்துல்லா தெரிவித்தார்.

மோகன்லாலின் பிரார்த்தனைக்கு எதிர்வினை என்ன?

பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் இந்த சர்ச்சையில் மோகன்லால் மற்றும் மம்முட்டியை ஆதரித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மம்முட்டிக்கும் மோகன்லால் போன்ற ஒரு நண்பர் இருக்க வேண்டும், ஒவ்வொரு மோகன்லாலுக்கும் மம்முட்டி போன்ற ஒரு நண்பர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களது சிறந்த நட்பு சில சிறிய, குறுகிய மனம் படைத்த எதிர்மறை மக்கள் சிலரின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருப்பது இயல்புதான். ஆனால் அவர்களைப் பற்றி யார் கவலைப்பட்டது," என ஜாவேத் அக்தர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவதேகரும் மோகன்லாலை பாராட்டினார்.

"உங்கள் நண்பரும் சிறந்த கலைஞருமான மம்முட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததற்காக வாழ்த்துகள் மோகன்லால்ஜி. இவைதான் உண்மையான இந்திய நெறிகள். அதுதான் உலகளாவிய சகோதரத்துவம் என்பதால் நாம் அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறோம்," என அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இயக்குநராக விரும்பும் ஒரு நபராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஷிவ் மோகன் என்ற எக்ஸ் பயன்பாட்டாளார், "நமது அடித்தளம் பலரின் சுவர்களைவிடப் பெரியது. திரை நட்சத்திரங்கள் என்பதைவிட, இருவரும் நட்பு மற்றும் மனிதத்தின் அடையாளமாக உள்ளனர். மதத்தின் பெயரால் வெறுப்பு இருக்கும் காலத்தில், கூடுதல் பலம் தேவைப்படுகிறது. நான் எப்போதுமே மம்முட்டி மற்றும் மோகன்லாலின் ரசிகனாக இருந்திருக்கிறேன்," என எழுதியுள்ளார்.

ஆந்திர பிரதேச பாஜக துணைத் தலைவர் விஷ்ணுவர்தன் ரெட்டி டிவிட்டரில், "ஒரு மலையாள இந்து நடிகர் மோகன்லால் தனது இஸ்லாமிய நண்பர் மம்முட்டியின் ஆரோக்கியத்திற்காக ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்தார். இப்போது ஒட்டுமொத்த இஸ்லாமிய கும்பலும் அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என அவர் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதான் கேரளாவின் மதசார்பின்மை. அது எப்போதும் ஒருதலைப்பட்சமானதாக இருந்திருக்கிறது," என்று தெரிவித்திருந்தார்.

நபிலா ஜமால் என்ற தொலைக்காட்சி செய்தியாளர் எக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "மோகன்லால் மனமுருகி செய்த ஒரு சாதாரண பிரார்த்தனை ஒரு மத சர்ச்சையாக மாற்றப்பட்டிருப்பது நம்ப முடியாத விஷயம். மோகன்லால் தனது பதிலில் தெரிவித்தது மதிக்கப்பட வேண்டும்," என எழுதியிருந்தார்.

மோகன்லால், மம்முட்டி இடையிலான நட்பு ani தானும் மம்முட்டியும் 45 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருப்பதாக மோகன்லல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் மோகன்லால் முன்னிலையில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன், "மோகன்லால் சார் வீட்டில் சில கடுமையான விதிகள் உள்ளன. அந்த விதிகளை யாரும் மீற முடியாது, குடும்ப உறுப்பினர்கள்கூட மீற முடியாது. அந்த விதிகள் ஒரே ஒருவருக்காகத்தான் மீறப்படும், அந்த ஒருவர் மம்முட்டி," எனத் தெரிவித்தார்.

"அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்," என இதுகுறித்து மோகன்லால் தெரிவித்தார். தொழில்முறை போட்டி இருந்தாலும், மோகன்லால் மற்றும் மம்முட்டி அவர்களது நட்புக்காகவும் அறியப்படுகிறார்கள். இந்த சர்ச்சைக்குப் பிறகு "மம்முட்டி தனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர்" என்று மோகன்லால் தெரிவித்தார்.

"பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு? அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு ஒரு சிறு உடல்நலக் குறைவு இருந்தது. ஆனால் அது இயல்பானதுதான். கவலைப்பட ஏதும் இல்லை," என அவர் தெரிவித்தார்.

தாங்கள் இருவரும் 45 ஆண்டுகள் ஒன்றாகப் பணியாற்றி இருப்பதாகவும், 55 திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"அவர் எனக்கு சகோதரரைப் போன்றவர். எங்களது குடும்பங்கள் மிகவும் நெருக்கமானவை. இது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். நான் சபரிமலையில் இருந்தேன். அங்கு அவரைப் பற்றி நினைத்து பிரார்த்தனை செய்தேன்."

கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த யாரோதான் அந்த ரசீதை ஊடகத்திடம் அளித்திருக்க வேண்டும் என அவர் கூறினார். லூசிஃபெரின் இரண்டாம் பாகமான எல் 2: எம்புரான் படத்திற்காக மோகன்லாலுக்கு மம்முட்டி மார்ச் 26ஆம் தேதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தனது எக்ஸ் பக்கத்தில், "வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய எம்புரான் படக் குழுவுக்கு வாழ்த்துகள். அது உலகம் முழுவதும் எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்," என்று மம்முட்டி எழுதியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.