பல்லி விழுந்தால் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியுமா? பெரும்பாலும் எல்லார் வீடுகளிலுமே பல்லி நடமாட்டம் காணப்படும். பல்லிகள் நடமாடும் வீடு வாழும் வீடு என்று கூறப்படுவதுண்டு.
ஜோதிட சாஸ்திரத்தில், பல்லி நடமாட்டம், பல்லி மேலே விழுந்தால் என்ன, பல்லி கத்துவதற்கு என்ன பலன் உள்ளிட்ட விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. பல்லி விழும் பலன்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்; ஆனால் பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும், பல்லி மேலே விழுந்தால் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது பற்றி விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பல்லி விழும் பலன்கள் பற்றி விரிவாக பஞ்சாங்கத்தில் இருக்கும், அதே போல கௌளி சாஸ்திரம் என்ற பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, உடலின் சில பாகங்களில் பல்லி விழுவது நல்ல பலன்களைத் தரும். ஆண்களுக்கு வலது பக்கம் பல்லி விழும் பலன்களில் நன்மைகள் அதிகமாகவும், பெண்களுக்கு இடது பக்கம் பல்லி விழும் பலன்களில் நன்மைகள் அதிகமாகவும் ஏற்படும். பொதுவாக, பல்லி விழும் பலன் தவிர்த்து, பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
பல்லி உங்கள் உடல் மீது, சருமத்தில் அல்லது தலைமுடியில் நேரடியாக உடல் மீது படுவது போல விழுந்தால் அந்த இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் கை அல்லது கால், கழுத்து பகுதியில், கை விரல்களில் பல்லி விழும் போது ஒரு விதமான அறுவறுப்பும் பதற்றமும் ஏற்படும். எனவே அந்த பகுதியை நன்றாக சோப்பு போட்டு கழுவி விடுவது, அலர்ஜியோ அல்லது தொற்றோ ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
பல்லி விழும் பலன்களில் எதிர்மறையான பலன்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வரவும். அதேபோல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி தரிசிப்பது, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருக்கும் மர பல்லியை தரிசிப்பது, ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவிலில் இருக்கும் பல்லி தரிசனம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பல்லியை வணங்குவது உள்ளிட்டவை எதிர்மறையான பலன்கள் மற்றும் தோஷங்களை போக்கும். பல்லி விழும் பலன் நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் சரி, அந்த பலன்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.
பல்லி என்பது மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்ட ஜீவன் என்பதால், பல்லி விழும் பலன்கள் நன்மை, தீமை என்பதைக் கடந்து, மகாலட்சுமியை, பெருமாளை வணங்குவது உகந்தது.