தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் ஊர்கொண்டாப்பேட்டை பகுதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயிலில், 35 வயதுடைய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோயிலுக்கு வந்திருந்த அந்த பெண், இரவு 10 மணியளவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது, உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்தில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென தாக்கி, உறவினரை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்.
பின்னர், அந்தக் கும்பல் அந்தப் பெண்ணை ஒரு வெறிச்சோடிய இடத்துக்கு அழைத்து சென்று, கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வலியால் வாடிய அந்த பெண், “குறைந்தபட்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள்” என கதறிக் கேட்டுள்ளார்.
அவரது முகத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். மயக்கத்தில் இருந்த அந்த பெண், சில மணி நேரத்திற்குப் பிறகு விழித்து, தனது மரத்தில் கட்டப்பட்டிருந்ததை அவிழ்த்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி வைபவ் கெய்க்வாட் ரகுநாத் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. குற்றவாளிகள் ஏழு பேராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் மிகவும் கொடூரமானது. குற்றவாளிகள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.