ஜார்வேயில் 45,202 மாணவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இரவில் படுக்கையில் மொபைல் போன் ஸ்கிரீனைப் பார்க்கும் பழக்கம் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் ஒரு மணி நேரம் போனில் ஸ்க்ரோல் செய்வது தூக்கமின்மை அபாயத்தை 59% அதிகரிக்கிறது என்றும், தூக்க நேரத்தை சராசரியாக 24 நிமிடங்கள் குறைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த விளைவுகள் சமூக ஊடக பயன்பாடு மட்டும் காரணம் என நிரூபிக்க முடியவில்லை. தூக்கமின்மை என்பது, வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை தூங்குவதில் சிரமம், மற்றும் பகல்நேர தூக்கமாக வரையறுக்கப்படுகிறது.
AIIMS மருத்துவமனையின் ENT மற்றும் தூக்க நிபுணர் டாக்டர் சீமாப் ஷேக் கூறுவதில், இந்திய மக்கள்தொகையில் 34% பேர் தடைசெய்யும் தூக்க மூச்சுத்திணறல் போன்ற தூக்க கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஸ்மார்ட் போன், மடிக்கணினி, டிவி மற்றும் கிண்டில் போன்ற அனைத்து திரை சாதனங்களும், தங்களைப் பயன்படுத்தும் நபரை விழித்திருக்க வைத்துவிடுகின்றன. இந்த சாதனங்களில் இருந்து வரும் நீல ஒளி, மூளையின் தூக்க மையத்துடன் தொடர்புடைய செல்களை தூண்டி, தூக்கத்தை சீர்குலைக்கும்.
இதனால் நினைவாற்றல் குறைபாடு, எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் உருவாகும். இந்த பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, இரவில் தூங்குவதற்கு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு திரை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், இரவு நேர அறிவிப்புகளை (notifications) முடக்கும் வழக்கம், தூக்கத்தில் இடையூறு ஏற்படாமல் காக்கும். டாக்டர் ஷேக் கூறுகையில், ஒழுங்கான தூக்க அட்டவணையைப் பின்பற்ற வேண்டும், தூங்க வசதியான சூழலை உருவாக்க வேண்டும்.
மேலும் தூங்கும் நேரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரங்களுக்கு முன் காஃபின் மற்றும் மதுபானங்களை தவிர்க்க வேண்டும் என்றார். தூக்கம் என்பது ஒருவரின் உடல், மன ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது என்பதால், இரவில் ஸ்கிரீன் பார்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.