கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படும் பேருந்தில் ஓட்டுநர் பணத்தை எண்ணிக்கொண்டே ஓட்டிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இதனையடுத்து அந்த ஓட்டுநர் பணியிடை நீக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்துக்கு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில்,
இந்த சம்பவம் நேற்று (29.03.2025) இரவு நடந்துள்ளது. வழக்கம்போல் பயணிகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், இறுதிப் பயணநடை என்பதால் நடத்துனர், ஓட்டுநரிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை ஒப்படைத்து, கணியூர் டோல் கேட் அருகே இறங்கிவிட்டார்.
இதன்பிறகு, ஓட்டுநர் பேருந்தை இயக்கும் முன் பணத்தை சரியாக எண்ணாமல், இயக்கும்போதே எண்ண தொடங்கினார். இதனால், கவனச்சிதறலுக்கு இடமளித்து, இது ஒரு பாதுகாப்பு விஷயமாக மாறியதாக புகார்கள் எழுந்தன.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து ஓட்டுநர்களுக்கும் பேருந்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.