சைக்கிள் மெக்கானிக்.. அடுத்த வேளை சாப்பிட பணமில்லை.. இன்று சொத்து மதிப்பு ரூ.3458282654000..!
Tamil Minutes March 31, 2025 05:48 AM

 

ஒரு தொழில் தொடங்க பெரிய பணக்கொள்முதலோ அல்லது வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்க வேண்டுமோ என்பது அவசியமில்லை. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சொய்ச்சிரோ ஹோண்டா. இவரிடம் நிதி வசதியோ, பணக்கார குடும்ப பின்னணியோ இல்லை. ஆனால் அவரிடம் இருந்தது ஒரு கனவு, தன்னம்பிக்கை, வெற்றியை அடைய வேண்டும் என்ற ஆசை.

தனது உழைப்பால், இன்று 4.43 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3458282654000 சொத்து மதிப்பை கொண்டுள்ளார்..

சொய்ச்சிரோ ஹோண்டா தந்தை ஒரு சைக்கிள் மெக்கானிக்காகவும், தாயார் துணி நெய்தவராகவும் இருந்தார்கள். 1906-ஆம் ஆண்டு பிறந்த ஹோண்டா, சிறுவயதில் சைக்கிள்களை பழுது பார்க்கும் வேலை செய்தார்.

அவர் படிப்பில் அதிகம் திறமையானவரல்ல, ஆனால் இயந்திரங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக 16-ஆம் வயதில் பள்ளியை விட்டுவிட்டு தந்தையின் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். பல நாட்கள் அடுத்த வேளை சாப்பிட கூட பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினியுடன் வேலை பார்த்துள்ளார்.

அப்போது தான் 16-வது வயதில் கூலி வேலை பற்றிய விளம்பரத்தை பார்த்து டோக்கியோவுக்கு சென்றார். அவருக்கு மெக்கானிக் வேலை கிடைக்கவில்லை, ஆனால் ஒரு கேரேஜில் அடுக்கிவைத்த பொருட்களை துடைக்கும் வேலைகளை செய்தார். இவ்வாறு வேலை பார்த்தபோது, மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொண்டார்.

அந்த சமயம், ஜப்பானில் ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த நிறுவனத்தில் வேலை செய்த மெக்கானிக்குகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். இதனால், ஹோண்டாவிற்கு கார்கள் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அவர் தொழிலை கற்று கொண்டார்.

ஹோண்டா தனது முதலாவது தொழிற்சாலையை ஹமமாட்சுவில் ஆரம்பித்தார். ஆனால் இது இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சால் அழிந்துவிட்டது. ஆனாலும் மனம் தளராது 1946-ஆம் ஆண்டு Honda Technical Research Institute-ஐ தொடங்கினார். அதன்பின்னர் ஒரு ஜெனரேட்டர் இன்ஜின் வைத்த சைக்கிள் உருவாக்கினார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1949-ஆம் ஆண்டு, தனது நிறுவனத்தின் பெயரை Honda Motors என மாற்றினார்.

சில ஆண்டுகளுக்கு பின் எடை குறைவான மற்றும் எரிபொருள் திறன் கொண்ட Super Cub என்ற பைக்கை உருவாக்கினார். இந்த பைக்கும் சந்தையை கவர்ந்தது.

பைக்கிலிருந்து கார்கள் என ஹோண்டாவின் தொழில் விரிவடைந்து உலக அளவிற்கு சென்றது. 1964-ஆம் ஆண்டிற்குள், அமெரிக்காவில் ஓடும் ஒவ்வொரு இரண்டாவது பைக்கும் ஹோண்டாவைச் சேர்ந்ததாக இருந்தது! 1963-ஆம் ஆண்டு, T360 மினி டிரக் என்ற முதல் ஹோண்டா காரை உருவாக்கினார்.

பின்னர், Civic கார் அறிமுகமானது. இது ஜப்பானில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 1980-ஆம் ஆண்டுகளில், ஹோண்டா உலகின் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளர் ஆனது.

1991-ஆம் ஆண்டு, சொய்ச்சிரோ ஹோண்டா காலமானார் என்றாலும் இன்று, ஹோண்டா 40.43 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகின் முன்னணி வாகன நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.