திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் அருகே கோணக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (54). இவருக்கு செங்கொடி (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி சிவக்குமார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது தலையில் குலவிகல்லை போட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவர்களுடைய மகன் சங்கேஸ்வரன் தனது தந்தையின் பேரில் உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். அந்த வழக்கு திருச்சி மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மார்ச் 28ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிறிஸ்டோபர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சிவகுமார் மீதான குற்றம் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியதோடு ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து விரைந்து முடித்த காரணத்திற்காக துறையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பாராட்டினார்.