இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த ஒரு ராஜாங்க ரீதியான உறவுகளும் இல்லை. கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே மறுபடியும் வார்த்தைப் போர் மூண்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது குண்டு வீசப் போவதாக மிரட்டி வருகிறார். இரானோ அமெரிக்காவோடு இனி எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறி இருக்கிறது.
சமீபத்தில் இரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு நிறுவனமான ஐஆர்என்ஏ, ஓமன் நாட்டின் மூலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்துக்கு பதில் அனுப்ப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. முன்னதாக புதிய அணு ஒப்பந்தத்திற்கு இரான் விரைவில் சம்மதிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்கா தங்கள் மீது அதிகபட்ச அழுத்தம்' தரும் கொள்கையை கடைபிடிக்கும் வரை அதனுடன் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று இரான் குறிப்பிட்டுள்ளது.
இரானுக்கு டிரம்ப் மிரட்டல்மார்ச் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அணு ஒப்பந்தம் தொடர்பாக இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார்.
ஐஆர்என்ஏ-வின் கூற்றுப்படி இந்தக் கடிதம் மார்ச் 12-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்களின் தூதர் வழியாக இரானை வந்தடைந்தது.
இரான் பேச்சுவார்த்தையில் இடம்பெறாவிட்டால் அந்த நாடு அணுஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்தும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பைப் பற்றி, ஜெட்டாவில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி பேசும் போது ''அமெரிக்கா தங்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதைக் கொள்கையாக கொண்டிருக்கும் வரை அதனோடு நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை", என்றார்.
அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவாக ஒரு உடன்படிக்கையை எட்டவில்லை என்றால் இரான் மீது குண்டு வீசப் போவதாகவும் அதன் மீது அதிக வரிகள் விதிக்கப் போவதாகவும் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மிரட்டியுள்ளார்.
ஆனால் கடந்த வாரமே வாஷிங்கடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள இரான் மறுத்து விட்டது.
அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்றான என்பிசி நியூஸ் உடனான தொலைபேசி நேர்காணலில் இரானைப் பற்றி டிரம்ப் பேசியபோது, ''அவர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக வெடிகுண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் பார்த்திராத மாதிரியான தாக்குதலாக அது இருக்கும்".
அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சு இல்லை: இரான்அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதைத் திட்டவட்டமாக மறுப்பதாக இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஏபி செய்தி முகமையின் கூற்றுப்படி, இரானின் உச்சபட்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்துக்கு டெஹ்ரானின் முதல் எதிர் நடவடிக்கை இதுதான்.
ஓமன் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை திறந்து வைத்துள்ளதாக அதிபர் மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தை 2018-ஆம் ஆண்டில் தனது முதல் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார் டிரம்ப். பின்னர் இரான் மீது அதிக அழுத்தம் தரும் கொள்கையின் ஒரு பகுதியாக இரான் மீது அவர் மீண்டும் தடைகளை கொண்டு வந்தார்.
2015-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தனது அணு ஆயுத நடவடிக்கைளைக் குறைத்துக் கொள்ளவும் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் இரான் ஒப்புக் கொண்டிருந்தது. அதற்கு ஈடாக, இரான் மேல் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.
இரானின் அணு ஆயுத் திட்டம் மற்றும் தொலைதூர ஏவுகணைத் திட்டங்களின் மீது காலவரையற்ற தடை விதிக்கும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாக 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது டிரம்ப் கூறினார்.
இதன் பிறகு இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது நிலைமை நிறையவே மாறியுள்ளது.
காஸா தாக்குதலுக்குப் பிந்தைய நிலவரம்காஸா மோதல் காலகட்டத்தில் இஸ்ரேலின் குறி, 'எதிர்ப்பின் அச்சு' என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட இரானாகவே இருந்தது.
இதே காலகட்டத்தில், இரான் உதவியுடன் செயல்படும் யேமனின் ஹாதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது. இதுதவிர இரானின் அணுஆயுத திட்டத்திற்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிரட்டலும் தொடர்கிறது.
''நாங்கள் பேச்சுவார்த்தையைத் தவிர்க்க விரும்பவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டதே இதுவரை பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள்தான் (அமெரிக்கா) நிரூபிக்க வேண்டும்," என்று அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்று தலைவர் அழுத்திச் சொன்னதாக ஆயதுல்லா அலி காமனெயி பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
ஏபி செய்தி நிறுவனத்தின்படி, பெஷேஷ்கியானின் அறிக்கைக்கு , 'இரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலைப் பெறுவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது.
அதோடு கூடவே, ''இரானுடன் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேச அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரானிய அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அவர் வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தால் அது இரானுக்கு நல்லதல்ல" என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இரண்டாம் முறை பதவியேற்று ஒரு மாத காலத்துக்கும் குறைவான காலகட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி, இரான் மீது 'அதிக அழுத்தம்' கொடுப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்.
''அணுஆயுதப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இரானுடன் செய்ய விரும்புகிறேன். அவர்கள் சாக விரும்பவில்லை. யாருமே சாக விரும்புவதில்லை… நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் இஸ்ரேல் இரான் மீது குண்டு வீசாது." என்று நியூயார்க் டைம்ஸ் இதழிடம் டிரம்ப் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆனால் கொமெரியும், இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் அமெரிக்காவுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்வதை மறுத்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்துடனான எந்தப் பேச்சுவார்த்தையும் 'புத்திசாலித்தனமாகவோ, மரியாதைக்குரியதாகவோ' இல்லை என்று பிப்ரவரி 2025-இல் ஆயதுல்லா அலி காமனெயி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலாக இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் முறியடிக்க முடியாது என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்திருந்தார்.
இரான் அரசாங்க செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-வில் வெளியான மார்ச் 8 அறிக்கையின்படி, ''இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் அழிக்க முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்கள் மூளையில் உள்ள தொழில்நுட்பத்தை எந்த வெடிகுண்டாலும் அழிக்க முடியாது, '' என்று அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு முழுவதும் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அராச்சி எச்சரித்தார்.
அதிக அழுத்தம் தருவதென்பது சட்டத்தை மீறுவது மற்றும் மானுடத்திற்கு எதிரானது என்று பல சந்தர்ப்பங்களில் இரான் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மறைமுகக் கடிதப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக இரான் மற்று அமெரிக்கத் தலைவர்கள் இடையேயான தொடர்புகள் பகிரங்கமாகி இருக்கின்றன.
மே 2009-இல் பராக் ஒபாமா, ஆயதுல்லா காமனெயிக்கு முதல் கடிதம் எழுதினார். இதை 2009-ஆம் வருடம் ஜூன் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது காமனெயி குறிப்பிட்டதுடன், அதற்கு பதிலளிக்கவும் செய்தார்.
இதன் பிறகு செப்டம்பர் 2009-ல் காமனெயிக்கு இரண்டாம் கடிதம் பாரக் ஓபாமாவிடம் இருந்து வந்தது.
டபானக் வலைத்தளத்தின்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தவை பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அதன் மூலமாக இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழியை அமெரிக்க அதிபர் நாடுவதாக அந்த வலைத்தளம் குறிப்பிட்டிருந்தது. வாஷிங்டன் டைம்ஸோ, இரண்டு நாடுகளுக்கும் இடையே 'சிறந்த ஒத்துழைப்பை' ஒபாமா நாடுவதாக எழுதி இருந்தது.
2011-இல் ஒபாமா மூன்றாவது கடிதத்தை எழுதினார். இரான் நாடாளுமன்றத்தில் பேசிய அலி மோட்டாஹரி இந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்லும் போது அதன் முதல் பகுதி மிரட்டல் தொனியிலும், இரண்டாம் பகுதி நட்புறவு பற்றியும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மூன்று வருடங்கள் கழித்து அக்டோபர் 2014-ஆம் வருடம் ஒபாமா தனது நான்காவது கடிதத்தை எழுதினார். இரானுக்கும், அமெரிக்காவுக்குமான 'பொதுவான நலன்கள்' பற்றி ஒபாமா குறிப்பிட்டிருந்ததாகவும், இஸ்லாமிய அரசாகச் சொல்லிக் கொள்ளும் ஐஸ் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டிருந்தது.
2014 பிப்ரவரி தொடக்கத்தில் ஓபாமாவுக்கு ஆயதுல்லா அலி காமனெயி ஒரு கடிதம் எழுதினார், அதில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
2019-ஆம் வருடம் ஜூன் 13 அன்று காமனெயிக்கு டிரம்ப் ஒரு கடிதம் எழுதினார். முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தானே சென்று இந்தக் கடிதத்தை இரானில் வழங்கினார். இந்த சந்திப்பின் போதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று காமனெயி குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்திருக்கும் அதே வேளையில், இந்த வருடம் 2025-ல் ட்ரம்பின் கடிதம் வந்திருக்கிறது. இது ஒரு ராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு