மே.வங்கத்தில் சிலிண்டர் வெடித்து 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!
Dinamaalai April 02, 2025 10:48 AM

மேற்கு வங்கத்தில் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேற்கு வங்காளம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பதர்பிரதிமா பகுதியில் தோலாகாட் கிராமத்தில் நள்ளிரவில் சமையல் செய்ய பயன்படும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். வீட்டில் சமையல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 2 கேஸ் சிலிண்டர்களில் ஒன்று திடீரென வெடித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


எனினும் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டது என முதலில் தகவல் வெளியானது. நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த பிப்ரவரி 4-ந்தேதி கல்யாணி என்ற பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பதர்பிரதிமா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு நாளை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்படும். ஒரு வாரம் கழித்து மக்கள் அடுத்த செய்திக்கு சென்று விடுவார்கள். இதனை மறந்து விடுவார்கள். பூபதிநகர், எக்ரா, பட்ஜ் பட்ஜ், கல்யாணி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நாட்டு வெடிகுண்டுகளின் குவியல் மீது மேற்கு வங்காளம் ஏன் அமர்ந்திருக்கிறது? என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் என அவர் பதிவிட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்துறை மந்திரியாக உள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.