புதிய வரிவிதிப்புகள் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்காக உலகம் முழுவதும் காத்திருக்கும் நிலையில், உலகளாவிய பங்குச் சந்தைகள் நிலையற்றதாக உள்ளன.
அமெரிக்காவில் பங்குச்சந்தைகளின் நேரம் முடிவடைந்ததும் மாலை 4 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு உலகநாடுகளுக்கான புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நடைபெற உள்ள இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்கு "அமெரிக்காவை மீண்டும் செழிப்பாக மாற்றுவோம்" (Make America Wealthy Again) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்காவின் புதிய "விடுதலை தினம்" என்று குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
புதிய வரிகள் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகளை மட்டுமல்ல, "அனைத்து நாடுகளையும்" பாதிக்கக்கூடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து வரும் பொருட்களான அலுமினியம், எஃகு மற்றும் வாகனங்கள் மீதான தற்போதைய வரிகளுடன் சேர்த்து கூடுதல் வரிகளும் சேர்க்கப்படும் என்பதால், இந்த கட்டண அதிகரிப்பு எவ்வாறு உலகப்பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது குறித்து காணலாம்.
உலகளாவிய வரிவிதிப்பு போர்டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கான மோசமான எதிர் விளைவுகளில் ஒன்று உலகளாவிய வரிவிதிப்புப் போர் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
"கோட்பாடுகளின்படி, வெளிநாட்டுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்நாட்டுப் பொருட்களுக்கான மானியங்களாகச் செயல்படுகின்றன, இறக்குமதியைக் குறைத்து நிகர ஏற்றுமதியை அதிகரிக்கின்றன" என்று அமெரிக்க வரிவிதிப்புகளை குறிப்பிடுகிறது, இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் பொருளாதார ஆலோசனை நிறுவனம்.
இருப்பினும், இது மற்ற நாடுகள் தங்களின் வரிவிதிப்பு அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம், பதிலடி தரும் சூழலை உருவாக்கக் கூடும். இது அனைவருக்கும் உவப்பற்ற விளைவை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போது உலக நாடுகளின் நிலை கைதிகளின் குழப்ப கோட்பாட்டுடன் (Prisoner's Dilemma theory) ஒப்பிட்டு காணலாம்.
ஒரே குற்றத்தை இணைந்து செய்து சிக்கியுள்ள இரண்டு கைதிகளின் மனநிலையை ஒப்பிட்டுப்பாருங்கள். இதில் ஒரு கைதி தனது சொந்த நலன்களை மட்டுமே மனதில் கொண்டு சுயநலமாக முடிவெடுத்து மற்றவரை காட்டிக் கொடுத்தால் இருவரின் நிலையும் சிக்கலாகிவிடும்.
மாறாக இருவரும் அமைதியாக இருந்ததால் தலா ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மற்றவர் அமைதியாக இருந்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டவர் விடுதலை செய்யப்படுவார், மற்றவர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவார்.
இருவரும் ஒப்புக்கொண்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.
அதே நேரத்தில் சிறையிலிருக்கும் கைதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதே இருவருக்கும் சமமான, சாதகமுடைய குறைந்தபட்ச பாதிப்புக்கு வழி வகுக்கும்.
ஆஸ்டன் வணிகப் பள்ளியின் பொருளாதார வல்லுநர்கள், டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு சூழ்நிலைகளை மாதிரியாகக் கொண்டுள்ளனர். அதில் "பரஸ்பர வரிகளுடன் கூடிய முழு உலகளாவிய பதிலடி" என்பதும் இருக்கிறது.
முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்படும் பட்சத்தில் உலகளாவிய பொருளாதாரத்தில் 1.4 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்றும், இது விரிவான உலகளாவிய சீர்குலைவு, குறைக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பரவலான விலை உயர்வுகளை முன்னறிவிப்பதாகவும் அவர்கள் முடிவு செய்தனர்.
பிரேசிலிய பொருளாதார நிறுவனத்தின் (IBRE) இணை ஆராய்ச்சியாளரான லிவியோ ரிபேரோ, அபாயகரமான விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்.
உதாரணமாக, சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதால் அமெரிக்காவில் சீன பொருட்கள் நுழைவது தடுக்கப்படும். மாறாக மற்ற நாடுகளில் சீன பொருட்களின் உபரி புழக்கத்திற்கு வழிவகுக்கும் என்று ரிபேரோ விளக்குகிறார். இந்த பொருட்கள் இன்னும் குறைந்த விலையில் மற்ற நாடுகளை நிரப்பும்.
மேலும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நாடுகள் சீனாவின் மீதும் வரிகளை விதிப்பதன் மூலம் தங்கள் சொந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம்.
"நீண்ட காலமாக, நிலைமை இப்படியே தொடர்ந்தால், இறுதியில் நாம் அனைவரும் தோற்றுவிடுவோம்" என்று ரிபேரோ பிபிசியிடம் கூறினார்.
தங்கத்தின் விலை மேலும் உயரும்ஆனால் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்படுவது முதலில் அமெரிக்கர்கள் தான். இறக்குமதிக்கு அதிகரிக்கும் செலவுகள் விலைகளை உயர்த்தும் என்பதால், டிரம்பின் கட்டணத் திட்டங்களால் அமெரிக்க நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது டிரம்பின் முதல் பதவிக் காலத்திலும் நடந்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு உதாரணத்திற்கு, 2018 ஆம் ஆண்டு அவர் வாஷிங் மெஷின்கள் மீதான வரியை விதித்ததைக் குறிப்பிடலாம். அது தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான உபகரணங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த வரிகளின் விளைவாக அமெரிக்காவில் உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் அதிகரித்தது. ஆனாலும் கூட சலவை எந்திரங்களின் விலை சராசரியாக 12% உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.
இறுதியில், "வர்த்தக மோதலின் விலையை நுகர்வோர் ஏற்கிறார்கள்" என்று ஜெர்மனியில் உள்ள ஐஎன்ஜி வங்கியில் உலகளாவிய வர்த்தகத்திற்கான மூத்த பொருளாதார நிபுணர் இங்கா ஃபெக்னர் கூறினார்.
விலை உயர்வு எரிபொருள் பணவீக்கமாக மாறக்கூடும்,
இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நீண்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களை விதிக்க வேண்டிய கட்டடாயம் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது அமெரிக்க டாலரை வலுப்படுத்த வாய்ப்புள்ளது, ஏனெனில் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் வட்டி விகிதம் சார்ந்த முதலீடுகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள்.
"ஆனால் அது நுகர்வோரை எதிர்மறையான தாக்கங்களிலிருந்து தணிக்க போதுமானதாக இருக்காது, மேலும் டாலர் மதிப்பு உயர்வு ஏற்றுமதியையும் பாதிக்கும்" என்று லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வரி சட்டம் மற்றும் கொள்கைப் பேராசிரியர் கிம்பர்லி கிளாசிங் கூறினார்.
விலைவாசி உயர்வு மற்றும் மந்தநிலை அபாயம் ஆகியவற்றின் கலவையானது பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான பெடரல் வங்கியின் முயற்சிகளை சிக்கலாக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"பதிலடி நடவடிக்கைகளால் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படுவது மற்றொரு அம்சம் என்றாலும், அதற்கு முன்னதாகவே இது விவேகமற்ற கொள்கைகளின் தொகுப்பு" என்று கிளாசிங் கூறினார்.
பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், மார்ச் மாத இறுதியில் தங்கத்தின் விலை சாதனை உச்சத்தை எட்டியது, மேலும் மேலும் உயர வாய்ப்புள்ளது.
"புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வருவதால், தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், தொடர்ந்து விலை உயரக்கூடும்." என்று சிங்கப்பூரில் உள்ள சாக்ஸோ சந்தைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் சாரு சனானா கூறினார்.
பல்துறைகளிலும் விலைவாசி உயரும்டிரம்ப் முன்மொழிந்துள்ள வரிவிதிப்புகள் மற்றும், வர்த்தக கூட்டாளிகளி நாடுகளிடமிருந்து வெளிப்படவிருக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகள் உலகளாவிய விலை ஏற்றத்தைத் தூண்டக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சனானாவின் கூற்றுப்படி, இதில் எண்ணெய் மற்றும் எரிவாயு, கணினி சில்லுகள் மற்றும் செமிகண்டக்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள், சோயாபீன்ஸ், தானியங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை அடங்கும்.
"இந்த விலை அதிகரிப்பு விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் அதிக இறக்குமதி செலவுகளின் முதன்மையான விளைவாகும்" என்று சனனா விளக்கினார்.
"வரி உயர்வுகள் முழுமையாக நடைமுறைக்கு வராவிட்டாலும், வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்தக்கூடும், அதாவது அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து, மாற்றி குறைவான வரி கொண்ட நாட்டை நோக்கி நகரக்கூடும்.இது சந்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் செலவு அழுத்தங்களை அதிகரிக்கும்."
தைவானின் டிஎஸ்எம்சி (TSMC) மற்றும் நெதர்லாந்தின் ஏஎஸ்எம்எல் (ASML) உள்ளிட்ட செமிகண்டக்டர் துறையில் உள்ள நிறுவனங்கள், பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளரான TSMC, ஆப்பிள், என்விடியா, ஏஎம்டி, குவால்காம் மற்றும் இண்டெல் போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கு செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்கிறது. இதற்கிடையில், ASML நிறுவனம் சிப்கள் உற்பத்திக்குத் தேவையான தீவிர புற ஊதா லித்தோகிராஃபி (EUV) இயந்திரங்களைத் தயாரித்து அமெரிக்கா, தைவான் மற்றும் தென் கொரியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
தொழில்துறையின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டணங்கள் அதிக செலவுகள் மற்றும் விநியோக பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தேவை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தத் துறையை மேலும் பாதிக்கலாம். இருப்பினும், ஆலோசனை நிறுவனமான கேபிடல் எகனாமிக்ஸின் குழும தலைமைப் பொருளாதார நிபுணரான நீல் ஷியரிங், தனது பார்வையில் எச்சரிக்கையாக இருக்கிறார்.
"கட்டணங்களின் தாக்கம் பெரும்பாலும் எந்தப் பொருட்கள் குறிவைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது" என்று அவர் விளக்கினார்.
பிரெஞ்சு முதலீட்டு வங்கியான நாடிக்சிஸின் ஆசிய பசிபிக் பகுதிக்கான தலைமை பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா-ஹெர்ரெரோ, கட்டணங்கள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும் வரை எந்தெந்த பொருட்கள் விலை உயர்வைக் எதிர்கொள்ளும் என்று கணிப்பது கடினம் என்று கூறுகிறார். அப்படியிருந்தும் கூட, "பிற அதிகார வரம்புகளிலிருந்து அமெரிக்காவிற்குள் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்படலாம்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உலகப்பொருளாதார மந்தநிலைக்கான ஆபத்துஇவ்வளவு பெரிய பொருளாதார நாடுகள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கம் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன், இந்த ஆண்டு உலகளாவிய மந்தநிலைக்கான 40% அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறது, இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 30% ஆக இருந்தது.
"அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் காரணமாக உலகளாவிய மந்தநிலைக்கான அதிக ஆபத்தை நாங்கள் காண்கிறோம்," என்று ஜே.பி. மோர்கனின் தலைமை உலகளாவிய பொருளாதார நிபுணர் புரூஸ் காஸ்மேன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தார்.
"கட்டணக் கொள்கையைப் பயன்படுத்துவதில் நிர்வாகத்தின் மாற்றம் மற்றும் உணர்வுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் இந்த ஆபத்து நிலை அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன."
ஆனால் முழு தாக்கமும் தெளிவாக இல்லை என்று பிரேசிலிய பொருளாதார நிபுணரும் நிதிச் சந்தைகளில் நிபுணருமான ஆண்ட்ரே பெர்ஃபீட்டோ கூறுகிறார். கட்டணங்கள் டிரம்பிற்கு "தோல்விக்கான அதிக ஆபத்தை" ஏற்படுத்துகின்றன, ஆனால் எதுவும் நடக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
"இந்த அணுகுமுறை இதற்கு முன்பு இந்த அளவிற்கு முயற்சிக்கப்படாததால், அது தோல்வியடையும் என்று யாரும் உறுதியாகக் கூற முடியாது," என்று அவர் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு