ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவ் (வயது 76) உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இரவு 9.35 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது AIIMS மருத்துவமனையின் கார்டியோ நியூரோ சென்டரில் உள்ள கார்டியோ கிரிட்டிக்கல் கேர் யூனிடில், நெஞ்சியல் நிபுணர் டாக்டர் ராகேஷ் யாதவ் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் ஒருங்கிணைந்த குழு ஒன்று அவருடைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முன்னதாக, பீகாரில் உள்ள பட்டணா பராஸ் மருத்துவமனையில் குறுகிய காலம் சிகிச்சை பெற்ற லாலு யாதவ், பின்னர் டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார்.
அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, “அவரது முதுகில் மற்றும் கை பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதை டெல்லியில் அறுவைசிகிச்சை மூலம் சீர்செய்ய திட்டமிட்டுள்ளோம்.
விமானநிலையத்துக்குச் சென்றபோது அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து விட்டதால் பராஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்,” என தெரிவித்தார். நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வரும் லாலு யாதவ், இதய அறுவைச்சிகிச்சையும், சிறுநீரக மாற்றும் சிகிச்சையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.