பயங்கர நிலநடுக்கம்…! தொழுகையில் இருந்த 700 பேர் மண்ணுக்குள் புதைந்து பலி…. பெரும் சோகம்….!!
SeithiSolai Tamil April 01, 2025 01:48 AM

மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 அளவுடைய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தாக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மண்டலாய் விமான நிலையம் சேதமடைந்ததுடன், சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன.

தொலைதூர தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த பேரழிவால், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதுடன், 3,400 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலநடுக்கம் நிகழ்ந்த நேரம், ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை தொழுகை நேரமாக இருந்ததால், 700 முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிகள் இடிந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் முஸ்லீம் கமிட்டியைச் சேர்ந்த துன் கி கூறுகையில், சுமார் 60 மசூதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்றும், அவை பெரும்பாலும் பழமையான கட்டடங்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசு வெளியிட்ட 1,700 உயிரிழப்புகளுக்குள் இந்த 700 முஸ்லீம்கள் உள்ளார்களா என்பது குறித்து தெளிவாக தகவல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடோ மற்றும் மண்டலாய் நகரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.