உதகை தலைக்குந்தா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (65). இவர், தலைக்குந்தா பகுதியில் 25 ஆண்டுகளாக கிளினிக் வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரது கிளினிக்கில், நீலகிரி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில், எமரால்டு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிவேதா, சித்தா மருத்துவர் சுமதி உட்பட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இஸ்மாயில் வைத்திருந்தது போலி மருத்துவச் சான்றிதழ் என்பதும், பிளஸ் 2 மட்டும் படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து விசாரித்தபோது, இஸ்மாயில் வலிப்பு வந்து கீழே விழுந்தார்.
உடனே, 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, எக்ஸ்ரே பிரிவில் காத்திருந்த இஸ்மாயில் தப்பியோடினார். இது தொடர்பாக உதகை புதுமந்து காவல் நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த கிளினிக்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: போலி கிளினிக் நடத்தி வந்தது தொடர்பாக ஏற்கெனவே பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி ஆய்வு நடத்தி, கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்தோம். இதுதொடர்பாக, புதுமந்து காவல் நிலையத்தில் இஸ்மாயில் மீது புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், நவம்பர் மாதம் சட்டவிரோதமாக கிளினிக்கை மீண்டும் திறந்து போலியாக சிகிச்சை அளித்து வந்தார். மக்கள் புகாரின் பேரில் மீண்டும் அவரது கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்துள்ளோம். இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புது மந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளோம், என்றனர்.