தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை குறித்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நேற்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், இன்றும் இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க, கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்பதால் அதற்கான தனி தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் இது குறித்து “தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது. அதனால், இந்திய மீனவர்கள் என மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்படமாட்டார் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று 97 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு மாநில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டால் மத்திய அரசு இப்படிதான் நடக்குமா? கைது செய்யப்பட்டதை கண்டித்து கடிதம் எழுதினால் விடுதலை, பின்பு மீண்டும் கைது என இலங்கை அரசின் செயல் தொடர்கதையாக உள்ளது. இது போன்ற சிக்கல்களுக்குக் கச்சத்தீவை மீட்பே நிரந்தர தீர்வு. இந்த தனித் தீர்மானம், தமிழ்நாட்டு மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும், கச்சத்தீவு பிரச்சினையை மீண்டும் தேசிய அளவில் விவாதத்திற்கு கொண்டு வருவதற்காகவும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.