அதிர்ச்சி... கஜகஸ்தானில் மருத்துவ மாணவர் திடீர் மரணம்!
Dinamaalai April 03, 2025 12:48 PM

பெற்றோருடன் போனில் பேசி விட்டு, நண்பர்களுடன் சந்தோஷமாக இரவு உணவு சாப்பிட்டு முடித்து விட்டு, வீடு திரும்பிய இந்திய மாணவர், கஜகஸ்தானில் திடீரென உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்வி படித்து வரும் மாணவர் உத்கர்ஷ் ஷர்மா. இவர், கஜகஸ்தானில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உத்கர்ஷ்(22). இவர் கஜகஸ்தானில் உள்ள சிம்கென்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். தனது வழக்கமான பணிகளாக கல்லூரிக்குச் சென்று விட்டு, பின்னர் வழக்கம் போல ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சிகளை முடித்து விட்டு , குடும்பத்துடன் பேசிக் கொண்டு, நண்பர்களுடன் இரவு உணவு உண்டு, இரவுப் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய உத்கர்ஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உடனடியாக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உத்கர்ஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். உத்கர்ஷ், ஒரு ஹோமியோபதி மருத்துவரின் மகனாக இருப்பதோடு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த சாதனைகள் புரிந்தவர்.

மாநிலம் மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றதுடன், கல்வியில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தவர் எனக்கூறி அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்கர்ஷ் இறுதியாக குடும்பத்துடன் பேசிய போது, புதிய உடைகள் வாங்க பணம் கேட்டிருந்ததாக தெரிகிறது. அவரது சகோதரி மீண்டும் அழைத்தபோது அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று கொண்டிருந்ததாக கூறினர். 

இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா திருப்பி கொண்டு வர தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.