உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு ஒரு வேலை காரணமாக சென்றிருந்தார். அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்தவர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறார். ஆனால் சண்டிகரில் வேலை முடிந்த நிலையில் அந்தப் பெண்ணிடம் சொல்லாமல் தனது சொந்த ஊரான பிஜ்னோருக்கு திரும்பி விட்டார்.
இந்நிலையில் இவரால் ஏமாற்றப்பட்ட அந்த பெண் கடந்த புதன்கிழமை தன் காதலனை தேடி பிஜ்னோருக்கு வந்தார். முந்தைய நாளே வந்த இவர் இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் இருந்தார். மறுநாள் காலை சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனை பார்த்ததும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவரை நிறுத்தி பளார், பளார் என வெறித்தனமாக அடித்தார். அந்த தாக்குதலில் அந்த வாலிபரின் ஆடைகள் கிழிந்து விட்டன. தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான் என்று சொல்லிகொண்டே அவரை திரும்ப அடித்தார்.
அப்போது வாலிபர் பெண்ணிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு செல்வோம் என்று கேட்டுக் கொண்டார். அதனால் அவர் தன்னோடு வந்த சிறுமியுடன் அவரது பைக்கில் ஏறி காவல் நிலையத்திற்கு சென்றார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிய நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன்னை ஏமாற்றிய காதலனை பெண் சாலை என கூட பார்க்காமல் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.