பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரதன் டாடா, தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக தனது உயிலின் மூலம் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கி வைத்திருப்பது தற்போது வெளியாகியுள்ளது. 2024 அக்டோபரில் காலமான அவர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் தன்னுடன் பணியாற்றிய பணியாளர்களுக்கு சேவைக் காலத்தைப் பொருத்து ரூ.15 லட்சம் வரை வழங்க வேண்டும் என தனது உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, பங்கு நேர ஊழியர்கள் மற்றும் கார் சுத்தம் செய்பவர்களுக்கும் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என அவர் எழுதியுள்ளார். மொத்தம் ரூ.3,800 கோடி மதிப்புள்ள சொத்துகளில் பெரும் பகுதியை ரதன் டாடா எண்டோவ்மென்ட் ஃபவுண்டேஷன் மற்றும் டிரஸ்டுக்கு வழங்கியிருந்தாலும், அவருடைய நீண்டகால சேவையாளர் சிலருக்கு தனிப்பட்ட நற்கொடையாக பெரிய தொகைகளை வழங்கியுள்ளார்.
அவரது சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடி தொகையும், அதில் ஏற்கனவே உள்ள ரூ.51 லட்சம் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவரது பட்டிலர் சுப்பையா கோனாருக்கு ரூ.66 லட்சம், அதில் ரூ.36 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவரது செயலாளரான டெல்நாஸ் கில்டருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனது உடைகளை ஏழைகளுக்கு பயன்பட என ஏதேனும் நல அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது உதவியாளர் ஷாந்தனு நாய்டுவுக்கு கொர்னெல் பல்கலைக்கழக MBAக் கல்விக்காக வழங்கப்பட்ட ரூ.1 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. கூடுதலாக, தனது டிரைவர் ராஜு லியான் மற்றும் அண்டை வீட்டாருக்கு வழங்கப்பட்ட கடன்களும் மீட்கப்பட வேண்டாம் என அவர் உயிலில் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். மேலும், அவரது செல்ல நாய் டீட்டோவுக்காக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டதோடு, அதை சமையல்காரர் ராஜன் ஷா கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.