தடை செய்யப்பட்ட பழங்குடியினர் தீவு… தடையை மீறி நுழைந்த அமெரிக்கர்… அதிரடி கைது..!!!
SeithiSolai Tamil April 03, 2025 10:48 PM

அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டத்தில் ஒன்றான நார்த் சென்டினல் தீவு மிகவும் ஆபத்தான பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இந்த தீவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உலகின் கடைசி கற்கால நாகரீக முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த தீவுக்கு சென்ற கடைசி வெளிநாட்டவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் அப்பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப் பயணியான மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ்(24) என்ற இளைஞர் எந்த அனுமதியும் பெறாமல் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, பாலியாகோவ் கடந்த மார்ச் 29ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் குர்மா தேரா கடற்கரையிலிருந்து படகும் மூலம் வடக்கு சென்டினல் தீவிற்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணி அளவில் அந்தத் தீவை அடைந்துள்ளார். அங்கு தனது தொலைநோக்கியை பயன்படுத்தி அப்பகுதியை முழுவதும் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் எந்த மக்களும் இல்லாததால் பழங்குடியினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடற்கரைப் பகுதியிலேயே 1 ஒரு மணி நேரம் நின்று விசில் ஊதி ஒலி எழுப்பி பார்த்துள்ளார்.

ஆனால் எந்தவித பதிலும் கிடைக்காததால் அப்பகுதியில் 5 நிமிடங்கள் தரையிறங்கி தான் கையில் வைத்திருந்த கோலா பாட்டில் மற்றும் தேங்காய்களை போட்டுவிட்டு அப்பகுதியில் உள்ள மணல் மாதிரிகளை சேகரித்து கொண்டு, அப்பகுதி முழுவதும் வீடியோவில் பதிவு செய்து வைத்து விட்டு தனது படகில் மீண்டும் இரவு 7 மணி அளவில் குர்மா தேரா கடற்கரையை மீண்டும் அடைந்துள்ளார். அங்கு கரை இறங்கிய அவரை உள்ளூர் மீனவர்கள் கவனித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாலியாகோவ் மீது பழங்குடியினர் பாதுகாப்பு பிரிவு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அப்பகுதியில் சேகரித்த பொருட்கள் மற்றும் வீடியோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து நடத்திய விசாரணையில் அவர் அந்த தீவுக்கு இதுபோன்று ஏற்கனவே சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்காக அவர் பல மாதங்களாக திட்டம் தீட்டி, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தங்கி இருந்தபோது வேறு எங்கெல்லாம் சென்றுள்ளார் என்பதையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.