இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட தருணத்திலேயே, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னிலை சோஷலிச கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
''இந்திய காலனியாக்கத்திற்கு நாட்டை பலிக்கொடுக்கும் உடன்படிக்கைகள் வேண்டாம்'' என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு பதாகைகளை ஏந்திய இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
''மக்கள் வாழ்க்கைக்கு ஆபத்தான பாதுகாப்பு உடன்படிக்கையை ரத்து செய்யுங்கள்'' உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பாதுகாப்பு உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பிலான உடன்படிக்கை எந்தவித வெளிப்படை தன்மையும் இன்றி, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் தன்னிச்சையாக கைச்சாத்திட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.
குறித்த பாதுகாப்பு உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்பது தொடர்பில் இதுவரை அரசாங்கத்தினால் தெளிவூட்டல்கள் வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.
''கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தையோ, மக்களையோ அரசாங்கம் தெளிவுப்படுத்தவில்லை. அதற்கான எதிர்ப்பை நாங்கள் வெளியிடுகின்றோம். இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்தன இவ்வாறான உடன்படிக்கையொன்றை ராஜீவ் காந்தியுடன் ஏற்படுத்திக் கொள்ளும் போது பாரிய வன்முறைகளை நாட்டில் ஏற்படுத்தியிருந்தனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காவுக் கொள்வதற்கான வன்முறைகளை ஏற்படுத்திய கட்சி, குறைந்ததது அந்த வெளிப்படை தன்மையை கூட பேணாமையானது நாங்கள் கவலையடைகின்றோம்.'' என முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகள் குறித்து, அமைச்சரவை மற்றும் அதே கட்சியை சேர்ந்தவர்கள் கூட தெளிவில்லாத நிலைமை காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குறிப்பிடுகின்றார்.
''பாரிய காட்டிக் கொடுப்பை ஏற்படுத்திய நாளாக இந்த நாள் வரலாற்றில் பதிவாகியுள்ளது. தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மோதி அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் இந்த உடன்படிக்கை மக்களுக்கு இரகசியமாக நாடாளுமன்றத்திற்கு இரகசியமாக, அமைச்சரவைக்கு கூட தெரிவிக்காமல் கைச்சாத்திடப்படுகின்றது.'' என செய்தியாளர்களிடம் பேசிய முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவிக்கின்றார்.
இதேவேளை, திருகோணமலை - சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோரினால் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில். சம்பூர் மின்சார திட்டத்திற்கான காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டிற்கு எதிராக நேற்றைய தினம் அந்த பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு உடன்படிக்கை மற்றும் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் ஆரம்ப பணிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், அரசாங்கம் இந்தியாவுடன் இந்த உடன்படிக்கைகளில் இன்று கைச்சாத்திட்டது.
இந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திட தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை, கைச்சாத்திடுவதற்கு முன்னதாகவே உரிய வகையில் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த உடன்படிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள புரிந்துணர்வு நடவடிக்கைகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனூடாக இலங்கை அல்லது இந்தியாவின் தேசிய கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பின் தேசிய மற்றும் ராணுவ சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் மாத்திரமன்றி, ஐநாவின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கும் மதிப்பளித்து உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதன் ஊடாக இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளுக்கு வலுவான அடித்தளம் அமையும் என அவர் கூறுகின்றார்.
கைச்சாத்திடப்பட்ட 7 உடன்படிக்கைகள்- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு