அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபரானதிலிருந்து அவருக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது.
"ஹேண்ட்ஸ் ஆஃப்" (Hands Off) எனும் பெயரில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 1,200 இடங்களில் பேரணிகள் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூகம் முதல் பொருளாதார பிரச்னைகள் வரை டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கங்களில் குறைகள் உள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் டிரம்ப் புதிய இறக்குமதி வரியை அறிவித்த நிலையில், அமெரிக்காவை தாண்டியும் லண்டன், பாரிஸ், பெர்லின் போன்ற நகரங்களிலும் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஸ்டனில் போராட்டங்களில் ஈடுபட்ட சில போராட்டக்காரர்கள் கூறுகையில், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மீதான குடிவரவு அதிகாரிகளின் சோதனைகளைத் தொடர்ந்து நிகழ்ந்த கைதுகள் மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகளே தங்களை போராட தூண்டியதாக தெரிவித்தனர்.
பாஸ்டனில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் அருகே துருக்கியை சேர்ந்த மாணவர் ருமேய்சா ஓஸ்டுர்க் என்பவர், முகமூடி அணிந்திருந்த அமெரிக்க ஏஜென்டுகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது தன்னைப் போராட தூண்டியதாக சட்ட மாணவர் கேய்டி ஸ்மித் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இதை எதிர்த்து நீங்கள் இன்றைக்கு போராட வேண்டும், இல்லையெனில் இன்னொரு நாள் நீங்களும் இதனால் பாதிக்கப்படலாம்" எனக்கூறும் அவர், "நான் வழக்கமாக போராடும் பெண் அல்ல" என்றார்.
"மக்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்", "அவர் ஒரு முட்டாள்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் லண்டனில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் டிரம்ப் செய்துள்ள மாற்றங்களை குறிக்கும் வகையில், "கிரீன்லாந்து மீது தலையிடாதீர்கள்" "யுக்ரேன் மீது தலையிடாதீர்கள்", கனடா மீது தலையிடாதீர்கள் என அவர்கள் முழக்கமிட்டனர். கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து டிரம்ப் தொடர்ச்சியாக பேசி வருகிறார். யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் இடையே பொது இடத்திலே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் டிரம்ப் போராடி வருகிறார்.
ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் உரையாடுவதை கேட்க ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வாஷிங்டன் டிசியில் திரண்டனர். ஈலோன் மஸ்க் போன்ற பணக்காரர்கள், அரசு செலவினங்களையும் அரசுப் பணியாளர்களையும் பெரியளவில் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதை அவர்கள் குறிப்பிட்டனர்.
"அரசாங்கத்தை கோடீஸ்வரர் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதை" புளோரிடா நாடாளுமன்ற உறுப்பினர் மேக்ஸ்வெல் ஃப்ரோஸ்ட் கண்டித்தார்.
"நீங்கள் மக்களிடம் இருந்து திருடும் போது, மக்கள் எழுவார்கள் என்பதை எதிர்பாருங்கள். வாக்குப் பெட்டியிலும் தெருக்களிலும் அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள்," என அவர் தெரிவித்தார்.
டிரம்புக்கு மோசமான வாரம்அமெரிக்க அதிபர் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு மோசமான வாரத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
புளோரிடா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் செவ்வாய்கிழமை குடியரசு கட்சி வெற்றி பெற்றது. ஆனால், தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே குடியரசு கட்சி வென்றது.
ஜனநாயக கட்சியை சேர்ந்தவரை மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதியாக விஸ்கான்சின் மாகாண வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஈலோன் மஸ்க்கால் ஆதரிக்கப்பட்ட குடியரசு கட்சி வேட்பாளர் இதில் தோற்கடிக்கப்பட்டார்.
இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் ஈலோன் மஸ்க்கின் செல்வாக்கு குறித்த வாக்காளர்களின் கோபத்தை தங்களுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் மாற்றியுள்ளனர்.
சில கருத்துக்கணிப்புகள் அதிபர் டிரம்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு சிறிது குறைந்துள்ளதை காட்டுகின்றன.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வெளியான ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Ipsos) கருத்துக்கணிப்புகள், டிரம்புக்கான ஆதரவு 43% -ஆக குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபரானதிலிருந்து டிரம்புக்குக் கிடைத்துள்ள மிக குறைவான ஆதரவு இதுவாகும். டிரம்ப் ஜனவரி 20 அன்று அதிபரானபோது இது 47 சதவிகிதமாக இருந்தது.
அதே கருத்துக்கணிப்பு, டிரம்ப் பொருளாதாரத்தை கையாளும் விதத்துக்கு 37% பேர் ஆதரவு அளிப்பதாகவும், அமெரிக்காவில் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு 30% பேர் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஹார்வர்டு கேப்ஸ்/ஹாரிஸ் மேற்கொண்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில் டிரம்பின் நிர்வாகத்துக்கு கடந்த மாதம் 52% பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில், அது 49 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனாலும், அதிபராக ஜோ பைடன் செயலாற்றியதைவிட டிரம்ப் சிறப்பாக செயல்படுவதாக 54% பேர் தெரிவித்துள்ளனர்.
"நாம் நம்முடைய ஜனநாயக உரிமைகளை இழந்துவருகிறோம்" என்பதால் தான் போராட வந்திருப்பதாக வாஷிங்டனில் போராட்டக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"அவர்கள் அரசின் செலவுகளை குறைப்பது குறித்து நான் கவலை கொள்கிறேன்," என கூறும் அவர் பணி ஓய்வு மற்றும் கல்வி பலன்கள் குறித்து தான் கவலையுற்றிருப்பதாக தெரிவித்தார்.
டிரம்புக்கு போராட்டத்தின் செய்திகள் சென்று சேர்ந்துள்ளதா என அவரிடம் கேட்டபோது, "பொறுத்திருந்து பார்ப்போம். தினமும் அவர் கோல்ஃப் விளையாடுகிறார்" என பதிலளித்தார்.
டிரம்ப் சனிக்கிழமை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. புளோரிடாவில் தனக்கு சொந்தமான ரிசார்ட்டில் கோல்ஃப் விளையாடுவதில் அவர் நாளை கழித்தார். ஞாயிற்றுக்கிழமையும் (இன்றும்) அவர் கோல்ஃப் விளையாட திட்டமிட்டுள்ளார்.
டிரம்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை பாதுகாப்பதை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயக கட்சியினரை விமர்சித்துள்ளது.
"அதிபர் டிரம்பின் நிலைப்பாடு தெளிவானது. தகுதியான பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வார். ஆனால், சமூக பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, மருத்துவ உதவி ஆகிய பலன்களை சட்ட விரோத அந்நியர்களுக்கு வழங்குவதே ஜனநாயக கட்சியினரின் நிலைப்பாடு. இதனால், இந்த திட்டங்கள் திவாலாகி, அமெரிக்க மூத்த குடிமக்களை நசுக்கிவிடும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் உயர்நிலை குடிவரவு ஆலோசகர்களுள் ஒருவரான டாம் ஹோமன், சனிக்கிழமை அன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், நியூ யார்க்கில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வெளியே போராட்டக்காரர்கள் பேரணி நடத்தியதாக கூறினார். ஆனால், அந்த சமயத்தில் அவர் வாஷிங்டனில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
"காலியாக உள்ள வீட்டில் அவர்கள் போராட்டம் நடத்தலாம்" என தெரிவித்த அவர் "போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை,"என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு