ஆஸ்திரேலியா MMA பயிற்சியாளர் ரெனாடோ சுபோட்டிக். இவர் ஒரு செமினாரில் பங்கேற்க அமெரிக்காவிற்கு சென்றபோது தனக்கு நடந்த வேதனையான சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதிவில், ரொனாடோ சுபோடிக் செமினாரில் பங்கேற்க அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கியதும் அவரை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளதாகவும், தொடர்ந்து சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியதால் தான் ஒரு செமினருக்காக வந்ததை தெளிவுபடுத்தியதையும் கூறினார். மேலும் எந்த விதமான விளக்கமும் இன்றி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். அது தனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்து விட்டு சிறையில் கொடுக்கப்பட்ட ஆடையை அணிய வைக்கப்பட்டதுடன், ஒரு நாற்றம் வீசும் போர்வை மற்றும் மெத்தையையும் மட்டும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின் சிறையில் உள்ள சிலர் தன்னுடைய பொருட்களை திருட முயன்ற போது அவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும், சிறையில் வன்முறை சத்தங்கள், உணவு முறை மிகவும்மோசமானதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அன்று இரவு முழுவதும் தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அந்த ஒரு நாள் சிறை அவருக்கு மிகவும் கொடூரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் மறுநாள் காலை தான் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வந்ததும், அவரை காவலாளிகள் கைவிலங்கோடு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று பழைய உடைகளை திருப்பி கொடுத்தனர்.
ஆனால் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் அதன் பின் தான் நாடு கடத்தப்படுவதாக கூறப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இதனைஅடுத்து அதிகாரி ஒருவர் இப்படி நடந்து இருக்கக் கூடாது. இது ஒரு சிறிய தவறாகும் என்று கூறி மன்னிப்பு கேட்டதாகவும் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி உள்ள சுபோட்டிக் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த அனுபவம் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.