வீட்டிலிருந்தே பரிசோதிக்கப்படும் 'கிட்' (kit) மூலம் மேற்கொண்ட டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளை பார்த்த போது சூசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
70 வயதைக் கடந்துவிட்ட அவர் தன்னுடைய தாத்தா குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. வேறு ஏதேனும் வித்தியாசமான முடிவுகள் வருகிறதா என்பதை பார்க்க தனியார் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் அவர் பணம் செலுத்தியிருந்தார்.
"அந்த பரிசோதனையில் அயர்லாந்து வழித்தோன்றல்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது, ஆனால், எனக்குத் தெரிந்தவரை அது தவறு," என்கிறார் சூசன்.
"அதை அப்படியே புறந்தள்ளினேன், அதுகுறித்து நினைக்கவில்லை" என்கிறார் அவர்.
ஆனால், அப்படி நடக்கவில்லை.
தன்னுடைய குடும்பத்தின் பின்னணி குறித்து தனக்கு தெரிந்தது எல்லாம் தவறானது என சூசனுக்குத் தெரிய ஆறு ஆண்டுகளாகின. சூசன் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல.
1950களில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் (NHS) மகப்பேறு வார்டில் மற்றொரு பெண் குழந்தையுடன் தான் மாற்றப்பட்டதாக அவர் பின்னர் கண்டுபிடித்தார்.
பிபிசியால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய சம்பவங்களில் சூசனுடையது இரண்டாவது சம்பவம். குறைந்த செலவில் டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் ஒருவருடைய மரபுவழி குறித்துக் கண்டறியும் இணையதளங்களின் பெருக்கத்தால் இன்னும் பலரும் இப்படி முன்வரலாம் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்பாராத முடிவுதோள் பட்டை வரை படரும் வெள்ளை முடி கொண்ட, கூர்மையான, வேடிக்கையான பெண்மணியான சூசன், தெற்கு இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தன்னுடைய கதையை என்னிடம் விவரித்தார்.
அவருக்கு அருகே அமர்ந்திருந்த சூசனின் கணவர், அவ்வப்போது தன் மனைவிக்கு பல நிகழ்வுகள் குறித்து நினைவூட்டிக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு சூசன் டி.என்.ஏ பரிசோதனை செய்த போது, குடும்ப மரபு வரலாறு குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் அதன் முடிவுகளை தன்னுடைய பெரியளவிலான தரவுகளுடன் சேர்த்து ஆய்வு செய்தது. இதன்மூலம், அதே மரபணுவுடன் ஒத்துப்போகும் மற்ற பயனர்கள் (நெருக்கமான அல்லது தூரத்து சொந்தங்கள்) தொடர்புகொள்ள முடியும்.
ஆறு ஆண்டுகள் கழித்து திடீரென சூசனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
முன்பின் தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய மரபணு தரவுகள், சூசனுடன் ஒத்துப்போவதாக அதில் கூறியிருந்தார். அதன்படி, தான் அவருடைய உடன்பிறந்தவராகத்தான் இருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
"எனக்கு பதற்றமாகிவிட்டது. பலதரப்பட்ட உணர்வுகளால் நான் ஆட்பட்டேன், மிகவும் குழப்பமாக இருந்தது." என்கிறார் அவர்.
ரகசியமாக தன்னை யாராவது தத்தெடுத்திருக்கலாம் என்றுதான் சூசன் முதலில் நினைத்தார். அவருடைய பெற்றோர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்திருந்தனர், எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இதுதொடர்பாக தன்னுடைய மூத்த சகோதரரிடம் கேட்டார்.
இது அனைத்தும் மோசடி என அவருடைய சகோதரர் உறுதியாகக் கூறினார். அவருடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக சூசன் எப்போதும் இருந்துள்ளார். தன்னுடைய தாயார் கர்ப்பமாக இருந்தது குறித்த நினைவுகள் குறித்தும் அவர் "உறுதியாக இருந்தார்."
இருந்தாலும், சூசனுக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தன. தன்னுடைய சகோதரரை விட சூசன் சிறிது உயரம் அதிகமாக இருந்தார், மேலும் தங்க நிறத்தாலான முடி போன்றவற்றால் அவர் தன் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வித்தியாசமாக இருந்தார்.
சூசனின் மகள் இதுகுறித்து இன்னும் ஆராய்ந்தார். தன் தாய் பிறந்த தினத்தன்று பிறந்த அனைத்துக் குழந்தைகள் குறித்தத் தகவல்கள் அடங்கிய பிரதியை அவர் கண்டுபிடித்தார்.
அவர் பிறந்த என்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டிருந்த, அந்த பட்டியலில் இருந்த பெண் குழந்தையின் குடும்பப் பெயர், சூசனிடம் முன்பு தொடர்புகொண்டு பேசியவரின் குடும்பப் பெயருடன் ஒத்திருந்தது.
இது தற்செயலாக இருக்க முடியாது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பிரசவ வார்டில் நடந்த தவறாகவோ அல்லது குழந்தைகள் மாறியிருக்கவோ சாத்தியம் உள்ளது.
இத்தகைய விஷயம் பிரிட்டனில் சமீப காலம் வரை கேள்வியுறாதது, மேலும் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற சில உதாரணங்களே உள்ளன.
இன்றைக்கு என்.ஹெச்.எஸ். மருத்துவமனையில், குழந்தை பிறந்தவுடனேயே அதன் மணிக்கட்டில் இரண்டு பேண்டுகள் (band) அணிவிக்கப்படுகின்றன. மருத்துவமனையில் இருக்கும் காலம் வரை குழந்தையும் தாயும் ஒன்றாகவே தங்க வைக்கப்படுகின்றனர்.
1950களில் மகப்பேறு மருத்துவம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு தனி கவனிப்பில் வைக்கப்படுவர்.
"அந்த சமயத்தில் மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பு முழுவதும் நவீனமாகவில்லை," என்கிறார் லண்டன் சட்ட நிறுவனமான ரசெல் குக்-ஐ சேர்ந்த ஜேசன் டாங். இந்நிறுவனம், சூசன் தரப்பில் வாதாடுகிறது.
"குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணியாளர் உடனடியாக குழந்தைகளிடத்தில் அட்டை அல்லது டேக்-ஐ இணைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அது கீழே விழுந்து, தவறுதலாக வேறொரு குழந்தையிடமோ, தொட்டியிலோ இணைக்கப்பட்டிருக்கலாம்." என்று அது கூறுகிறது.
1940களின் இறுதியில் இருந்து பிரிட்டனில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பெருமளவிலான பிரசவங்கள் நடைபெற்றதால், புதிதாக அமைந்த என்.ஹெச்.எஸ் மருத்துவமனையின் பரபரப்பான மகப்பேறு சேவை மீது அதிக அழுத்தம் இருந்தது.
"சராசரியான, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த" குடும்பத்தில் ஓர் அங்கமாக சூசன் வளர்க்கப்பட்டார். பின் திருமணமாகி, இறுதியில் என்.ஹெச்.எஸ்-ல் பணிக்கு சேர்ந்தார்.
பதின்பருவத்தில் ஏற்படும் "வழக்கமான, சிறு மன அதிர்ச்சி" தவிர்த்து தன்னுடைய பெற்றோர்கள், "மிக நல்ல, அன்பான தம்பதிகள்" என்றும் "தங்களால் முடிந்த அனைத்தையும் தனக்கு செய்ததாகவும் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும்" கூறுகிறார் சூசன்.
"இவற்றையெல்லாம் பார்க்க அவர்கள் இல்லை என்பது ஒருபுறம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது," என்கிறார் சூசன். "மேலே இருந்து இவற்றையெல்லாம் அவர்கள் பார்த்தால், இங்கு என்ன நடக்கிறது என அவர்களுக்கு தெரியாது என நம்புகிறேன்."
முன்பு வீட்டிலேயே டி.என்.ஏ பரிசோதனைகள் எடுக்க முடிந்திருந்தால், அதை தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்க முடியும் என சூசன் நினைக்கவில்லை. ஏனெனில், அந்த உண்மை "மிக மோசமானதாக இருந்திருக்கும்."
"என்னை பொருத்தவரை அவர்கள் பற்றிய எல்லாமும் மாறிவிட்டதாக நினைக்கவில்லை, அவர்கள் இப்போதும் எனக்கு அம்மா, அப்பா தான்," என்கிறார் சூசன்.
மற்றொருபுறம், இதுவரை தன்னுடைய அண்ணனாக அறியப்பட்ட ஒருவருடனான உறவு, தான் கடந்து வந்திருந்த நிகழ்வுகளால் இன்னும் வலுவாகியிருப்பதாக கருதுகிறார்.
"இது எங்கள் இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியுள்ளது. நாங்கள் இப்போது அடிக்கடி சந்திக்கிறோம், 'மை டியர் சிஸ்டர்' என விளிக்கும் அட்டைகள் அவரிடமிருந்து கிடைக்கப் பெறுகின்றன," என்கிறார் சூசன்.
"அவரும் அவருடைய மனைவியும் உண்மையில் அற்புதமானவர்கள்."
அந்த சமயத்தில் தன்னுடைய உறவினர் ஒருவர், "வருத்தப்படாதீர்கள், நீங்கள் இப்போதும் குடும்பத்தில் ஒருவர்தான்" என எழுதி "அன்பான கடிதம் ஒன்றை" அனுப்பியதாக அவர் நினைவுகூர்கிறார்.
புதிய சொந்தங்களுடன் உறவுஅவருடைய புதிய ரத்த சொந்தங்கள் குறித்து கூறுகையில், நிலைமை இன்னும் கடினமானதாக இருப்பதாக கூறுகிறார்.
தன் உடன்பிறப்பு என கூறியவரை சூசன் நேரில் சந்தித்தார். தானும் அவரும் எப்படி ஒரே மாதிரியாக இருந்தோம் என்றெண்ணி சிரித்தார் சூசன்.
"அவருக்கு விக் வைத்து, கொஞ்சம் மேக்கப் போட்டால் நிச்சயம் அவர் என்னைப் போன்று இருப்பார்," என அவர் கேலியாக கூறுகிறார்.
குழந்தையாக இருந்த போதே தனக்குப் பதிலாக மாற்றப்பட்ட பெண் மற்றும் அவருடைய மகன்களின் புகைப்படங்களையும் சூசன் பார்த்தார்.
ஆனால், புதிய சொந்தங்களுடன் உறவை கட்டமைப்பது எளிதாக இல்லை.
"அவர்கள் என்னுடைய ரத்த சொந்தங்கள் என எனக்குத் தெரியும், ஆனால், அவர்களுடன் நான் வளராததால் அந்தளவுக்கு உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை," என்கிறார் அவர்.
"தன் சகோதரியுடன் (சூசன்) ஒன்றாக இணைய அவர்கள் முயற்சி எடுத்தது வியக்கத்தக்கது, அதை நான் புரிந்துகொள்கிறேன்."
சூசனின் உண்மையான பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். சூசன் அவருடைய தாயை போன்று இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
"என் அம்மா குறித்து இன்னும் அதிகம் அறிய விரும்புகிறேன், அவர் எப்படி இருப்பார் என்பது குறித்து அறிய விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியாது," என்கிறார் அவர்.
"உணர்வுகளை தள்ளிவைத்து தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் பார்த்தால், நான் வளர்க்கப்பட்ட விதம் சிறப்பானது."
இதுமாதிரியான வழக்கு ஒன்றில் இழப்பீடு பெறும் முதல் நபர் சூசன், ஆனால் அந்த தொகை என்ன என்பது குறித்து தெரியவரவில்லை.
இந்த வரலாற்று தவறை என்.ஹெச்.எஸ். ஒப்புக்கொள்வதற்கு முன்பு, சூசன் இரண்டாவது முறை டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க வேண்டியிருந்தது. பின்னர் "மிகவும் அன்பான விதத்தில்" என்.ஹெச்.எஸ் மன்னிப்பு கேட்டது.
கடந்தாண்டு இதேபோன்று பல பத்தாண்டுகளுக்கு முன்பு பிறப்பிலேயே குழந்தைகள் மாற்றப்பட்ட மற்றொரு வழக்கு குறித்து பிபிசி செய்தி வெளியிட்டது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கிடைக்கப் பெற்ற டி.என்.ஏ பரிசோதனை கிட் மூலம் இந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்தது.
இழப்பீடு என்பது பணத்தைப் பொருத்தது அல்ல என்றும், இத்தனை ஆண்டுகளாக தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கீகரிப்பதே என்றும் சூசன் கூறுகிறார்.
"குறை சொல்வதற்கு நமக்கு எப்போதும் யாராவது ஒருவர் வேண்டும், இல்லையா?" என கேட்கிறார் சூசன்.
"இது என்னுடனேயே மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் இருக்கும். இதற்கொரு தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.'" என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு