மகாராஷ்டிரா மாநிலம் போல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் போரு காண்டு பின்னார் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இவர் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் அவருடைய வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டனர்.
அதாவது தங்களுடைய வாகனம் பழுதடைந்து விட்டது என்று கூறிய அவரிடம் லிப்ட் கேட்டு அவரின் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். அவர்கள் 3 பேரும் பின்னால் ஏறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து வேனில் இருந்த இருவர் முகத்திலும் மிளகாய் பொடியை தூவி விட்டு பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழிப்பறி நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு திருமண பத்திரிக்கை கிடைத்தது. அதனை அவர்கள் மிளகாய் பொடியை கொண்டு வருவதற்காக பயன்படுத்தியது தெரிய வந்த நிலையில் அதனை வைத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.
அந்த பத்திரிகையில் இருப்பவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பற்றி தெரிய வந்தது. அதாவது ஆனந்த் லாம்டே என்பவரின் பெயர் அந்த பத்திரிகையில் இருந்தது. அதை வைத்து அவரிடம் நடத்தி விசாரணையில் அவர்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் பிறகு தன்னுடன் சேர்ந்து திருடிய மற்றவர்களையும் காட்டி கொடுத்தார். இதைதொடர்ந்து வழக்கில் தொடர்புடைய பாஜிராவ் பெஹ்ரே, பரமேஸ்வர் கமலகார், காண்டு பின்னார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் காண்டு பின்னார் போரு காண்டு பின்னாரின் சகோதரர். இவர்தான் திருட்டில் மூளையாக செயல்பட்டுள்ளார்.
மேலும் இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.