ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு, கங்கனாவிற்கு மின் கட்டணம் மூலம் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது மனாலியில் உள்ள அவரது வீட்டில், கங்கனா வசிக்காத போதும், ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் போடப்பட்டுள்ளதாம். இதனால் கங்கனா அதிர்ச்சியடைந்துள்ளார்.
காங்கிரஸ் அரசை எப்போதும் விமர்சித்து வரும் கங்கனா, இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி மிகவும் கோபமாக ஹிமாச்சல பிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். மண்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா, அங்கு ஆளும் கட்சியை விமர்சித்தார். மனாலியில் உள்ள தனது வீட்டிற்கு அதிகப்படியான மின் கட்டணம் வந்ததாகவும், அங்கு தான் வசிக்கவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் யாருமே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிக்கும் காங்கிரஸ் அரசின் செயல் வெட்கக்கேடானது என கூறியுள்ளார். மேலும் இது போன்ற செயல்களால் மாநிலத்தில் நிலைமை மோசமாக உள்ளது. சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார். சாதாரண மக்களின் கஷ்டம் யாருக்கும் தெரிவதில்லை. இதுபோன்று மின் கட்டணம் வந்தால் மக்களின் நிலை என்னவாகும்? அவர்கள் தங்கள் உரிமைக்காக போராட வேண்டுமா? என அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.
காலியான வீட்டிற்கு இவ்வளவு பெரிய கட்டணம் என்பது மாநில அரசின் நிர்வாகத்தை மோசமான நடவடிக்கையை காட்டுகிறது என ஆதங்கத்தை முன்வைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.