வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?
BBC Tamil April 05, 2025 05:48 AM
Netflix

மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியானது அடோலசென்ஸ் என்ற வலைத்தொடர் (வெப் சீரிஸ்)

ஆண் குழந்தைகளைப் பெற்ற அனைவரும் பார்க்க வேண்டிய வலைத்தொடர் என்று பலரும் இந்த வலைத்தொடர் பற்றி பகிர, இன்று பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது அடோலசென்ஸ்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்த வலைத்தொடரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றைய சூழலில் வளரிளம் ஆண் குழந்தைகளின் வாழ்க்கையும், உலகமும் எதைச் சார்ந்து இயங்குகிறது என்பதற்கான ஒரு அடிப்படையாக இந்த வலைத்தொடரை அணுக வேண்டியதாக உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அடோலசென்ஸ் வலைத்தொடர் கூறுவது என்ன? வளரிளம் ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும் கையாளுவதிலும் உள்ள சிக்கல்கள் என்ன?

வலைத்தொடரில் ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் கேட்பது போன்று, "நாம் அவர்களை சரியாக வளர்த்திருக்கின்றோமா"? இந்த விவகாரம் குறித்து பெற்றோர்களும், மனநல ஆலோசகர்களும் கூறுவது என்ன?

Netflix படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீஃபன் கிரஹாம், ஜேமியின் அப்பாவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் அடோலசென்ஸ் வலைத்தொடர் எதைப்பற்றியது?

இன்று சமூக வலைதளங்கள் மற்றும் பெண் எதிர்ப்பு மனநிலை கொண்ட இன்ஃபுளுயென்சர்கள் வளரிளம் ஆண் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த வலைதொடர்.

13 வயது சிறுவனான் ஜேமி (ஓவென் கூப்பர்), தன்னுடைய பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை நள்ளிரவில், சாலையில் வைத்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவார்.

அடுத்த நாள் காலை அவருடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்கின்றனர். அதன் பின்பு அவருடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே, நான்கு பாகங்களைக் கொண்ட இந்த வலைத்தொடர்.

ஒருவித குழப்பம், இரைச்சல், பதற்றத்தன்மை என்று இயல்பு வாழ்க்கையின் நடையோடு மெதுவாக செல்கிறது இந்த வலைத்தொடர். ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்கிறதோ என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் அந்த மெதுவான நகரும் தன்மையே இந்த வலைத்தொடரின் பலமான அம்சமாகும்.

வலைத்தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பகுதியில் இடம் பெறும் நீண்ட உரையாடல்கள்தான் இக்கதைக்கு வலு சேர்க்கிறது.

படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீஃபன் கிரஹாம், ஜேமியின் அப்பாவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு இளம் பெண்களை இரண்டு வளரிளம் சிறுவர்கள் கொலை செய்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே இந்த வலைத்தொடரை எடுக்க விரும்பினேன் என்று பிபிசியின் தி ஒன் ஷோவில் பேசிய கிரஹாம் கூறினார்.

Netflix வலைத்தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பகுதியில் இடம் பெறும் நீண்ட உரையாடல்கள் தான் இக்கதைக்கு வலு சேர்க்கிறது எங்கே கற்றுக் கொள்கின்றனர்?

இந்த வலைத்தொடரில் ஒரு பெண் குறித்த 13 வயது சிறுவனின் புரிதல் எவ்வாறு இருக்கிறது? அது எங்கிருந்து தோன்றுகிறது? அந்த புரிதலையும் நம்பிக்கையையும் வலுசேர்க்கும் காரணங்கள் என்ன என்று அடுத்தடுத்த காட்சிகள் இடம் பெறுகின்றன.

அடோலசென்ஸ் வலைத்தொடரில் ஜேமியை பலரும் 'அசிங்கமான' உருவம் கொண்ட ஒரு நபர் என்று அப்பள்ளி மாணவர்கள் அழைப்பது, கொலையுண்ட அந்த மாணவி அவரின் 'டேட்' அழைப்பை நிராகரித்தது, போன்றவற்றை தாங்கிக் கொள்ள இயலாமல், இந்த கொலை நிகழ்வதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த கொலையை செய்ததற்கான குற்ற உணர்வே அற்றவராக அவர் இருப்பார்.

கோவையைச் சேர்ந்த கவிதா, தன்னுடைய உறவினரை இந்த வலைத்தொடரை பார்க்க சொல்லி வற்புறுத்தியதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார்.

"அவருக்கும் 13 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். பள்ளியில் அவர் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஒன்றாக இணைந்து ஒரு வாட்ஸ்ஆப் குழுவை துவங்கியுள்ளனர். அவனுக்கு தனியாக போன் இல்லாத காரணத்தால், அவனின் அம்மா அவருடைய எண்ணைக் கொடுத்து அந்த குழுவில் இணைந்துள்ளார். குழந்தைகள், அதாவது எட்டாவது படிக்கும் குழந்தைகள் மத்தியில் பாலியல் சார்ந்தும், பாலுறவு சார்ந்தும் உரையாடல்கள் நிகழ்கிறது என்பதையே நாங்கள் அப்போது தான் அறிந்து கொண்டோம்," என்று தெரிவித்தார்.

"அது ஒரு ஆரோக்கியமான உரையாடலாக இல்லை. உருவக்கேலி என்பதைத் தாண்டியும் இளம் பருவத்தினர் மத்தியில் பேசப்படும் விசயங்கள் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த உரையாடல் நிச்சயமாக ஒருவரின் தன்னம்பிக்கையை உடைத்து, நாம் ஒருவரின் அன்புக்கு தகுதியவற்றாக உணர வைக்கும் அளவுக்கு அது மோசமான உரையாடலாக இருந்தது. அதனால் தான், அடோலசென்ஸ் பார்த்தவுடன் நான் என்னுடைய உறவினரை பார்க்கக் கூறி வற்புறுத்தினேன்," என்று தெளிவுப்படுத்தினார் கவிதா.

Getty Images

"இந்த வலைத்தொடர் முழுக்க முழுக்க பிரிட்டனை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சமூக, கலாசார பின்புலம் இந்திய சமூகத்தில் இருந்து வேறுபட்டுள்ளது. அங்கு காதல் சார்ந்த உரையாடலும், காமம் சார்ந்த உரையாடலும், அதனை அறிந்து கொள்வதற்கான அணுகலும் இந்தியாவோடு ஒப்பிடுகையில் பரந்துபட்டதாக உள்ளது," என்று தெரிவிக்கிறார் மனநல ஆலோசகர் ஶ்ரீதேவி சாய்நாத்.

தாய்லாந்தில் உள்ள சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான மன நல ஆலோசகராக இருக்கும் அவர், இந்திய சமூகத்தில் பெண் வெறுப்பானது ஊறிப்போன ஒன்றாக இருக்கிறது என்கிறார்.

"நம்முடைய வீடுகளில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் வெவ்வேறு விதமாக வளர்க்கப்படுகின்றனர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். மகன்களை பலமான ஆட்களாக வளர்ப்பதில்தான் அதிக ஆர்வம் இங்கே காட்டப்படுகிறது. பெண்கள் எப்போதும் ஒரு பலவீனமான பாலினம் என்ற போக்கு இங்கே புகுத்தப்பட்டுள்ளது.

அதனால்தான் இங்கு ஆண்கள் கோபப்படுவது இயல்பாக்கப்பட்டுள்ளது. இயலாமை என்றாலும் கோபம், சோகம் என்றாலும் கோபம், தோல்வி என்றாலும் கோபம். இந்த கோபம் அதிகரிக்கும் போது, தன்னை விட 'பலவீனமான' பாலினத்தின் மீதான அனைத்துவிதமான வன்முறையாக மாறுகிறது," என்று மேற்கோள்காட்டுகிறார் ஶ்ரீதேவி.

மேலும், காதல், காமம், பாலின ஈர்ப்புபோன்றவற்றைப் பற்றி இந்திய பெற்றோர்கள் இன்னும் இறுக்கமான மனநிலையைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார் அவர்.

"எதிர்பாலினத்தவர் மீதும், தன் பாலினத்தவர் மீதும் வளரிளம் பருவத்தில் ஒரு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது என்று இங்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான ஆலோசனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதே இல்லை. அப்போது பொதுவெளியில் எதுவெல்லாம் அவர்களின் நுகர்வுக்கு கிடைக்கிறதோ, அதை சரி தவறு என்ற பேதமில்லாமல் கற்றுக் கொள்கின்றனர்," என்கிறார் அவர்.

"இங்கு எந்த குழந்தையும் தவறான குழந்தை என்று யாரையும் நம்மால் சுட்டிக்காட்ட இயலாது. அவர்கள் வாழ்வதற்கான எத்தகைய சூழலை இந்த சமூகம் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்," என்று கூறுகிறார் அவர்.

Getty Images ''ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. பொதுவெளியில் எதுவெல்லாம் அவர்களின் நுகர்வுக்கு கிடைக்கிறதோ, அதை கற்றுக் கொள்கின்றனர்'' (சித்தரிப்புப் படம்) பள்ளிகளிலும் மாற்றங்கள் தேவை

"நம்மை விட நம்முடைய குழந்தைகள் புத்திசாலிகள் என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள்," என்று கூறுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளார் தேவநேயன்.

"நம்முடைய குழந்தைகளுடன் நாம் ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுகிறோமா என்பதை முதலில் நாம் நம்மிடம் கேட்க வேண்டும். செல்ஃபோன்களை அவர்களிடம் இருந்து நாம் பறித்துவிட இயலாது. ஆனால் அவர்கள் அருகே அமர்ந்து, எது சரி எது தவறு என்று விவாதிக்க இயலும். ஆலோசனையாக அல்லாமல் ஒரு நண்பராக இருக்க முயற்சி செய்வது ஓரளவுக்கு இந்த பிரச்னைக்கு தீர்வளிக்கும்," என்று கூறுகிறார் அவர்.

"என்னுடைய மகனிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவன் மூலமாக இன்றைய இளம் சமுதாயம் எப்படி இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். வீட்டிலும், பள்ளிகளிலும் அவர்களுக்கு போதிக்கும் அளவுக்கு நாம் நடப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளிப் பாடத்திட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை கற்பிக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக் கொண்டு, ஆரோக்கியமான உரையாடல்களுக்கும் மாற்றங்களுக்கும் வழி செய்ய வேண்டும்," என்று குறிப்பிடுகிறார் தேவநேயன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.