இந்தியாவுக்கு 37% வரி... 'நண்பேன்டா...'வையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செயலில் இறங்குங்கள் மோடி!
Vikatan April 05, 2025 11:48 AM

உலகமே அச்சத்தோடு எதிர்பார்த்திருந்த ‘வர்த்தகப் போர்’, ஏப்ரல் 2 அன்று தொடங்கியேவிட்டது. இது, அமெரிக்காவின் பொருளாதார சுதந்திர நாள் என்று அறிவித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவுக்குள் வரும் எந்தவொரு பொருளுக்கும் அடிப்படையான 10% வரியும், எந்த நாட்டிலிருந்து வருகிறதோ அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப தனியாகப் பரஸ்பர வரியும் விதித்திருக்கிறார். அமெரிக்காவுக்குப் பிற நாடுகள் என்ன வரி விதிக்கின்றனவோ, அதில் பாதி பரஸ்பர வரி. அமெரிக்காவுக்கு இந்தியா விதிக்கும் வரி 52%. இதில் பாதி 27% இந்தியாவுக்கு பரஸ்பர வரி.

ட்ரம்ப் அதிபரான பிறகு அவருக்கும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடந்த சந்திப்புகள், வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இதையெல்லாம் வைத்து, வரி விதிப்பில் இந்தியாவுக்குச் சலுகைகள் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘மோடி என் நல்ல நண்பர். ஆனால், அமெரிக்காவை இந்தியா சரியாக நடத்தவில்லை. அமெரிக்கா மீது இந்தியா விதிக்கும் வரிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வரி ‘தள்ளுபடி செய்யப்பட்ட வரி’தான்’ என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்துவிட்டார் ட்ரம்ப்.

‘அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 46 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 91 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இந்த வரி விதிப்பு பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம், ‘ஏற்கெனவே உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த, இறக்குமதியை வெகுவாகக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது இந்தியா. இந்நிலையில், இந்த வரி விதிப்பானது வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் குழப்பங்களையே ஏற்படுத்தும். நம் பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாகவே மாறும்’ என்று சொல்கிறார்கள், இந்தியப் பொருளாதார நிபுணர்கள் பலரும்.

இதற்குத் தீர்வாக அவர்கள் முன் வைப்பது, ‘இந்த வர்த்தகப் போர், சர்வதேச வர்த்தகச் சங்கிலியில் பெரிய அளவில் மாற்றங்களை உண்டாக்கும். எனவே, அமெரிக்காவுடனான புதிய வர்த்தக உடன்படிக்கைளை ஏற்படுத்துவது, வரி விதிப்புகளால் பொருளாதாரத்திலும் ஏற்றுமதியிலும் ஏற்படும் பற்றாக் குறையை சமாளிக்க மாற்றுவழிகளைத் தேடுவது, தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கிய முன்னெடுப்புகளை வேகப்படுத்துவது எனக் காலத்தின் கட்டாயங்களை உணர்ந்து நம் அரசு செயலில் இறங்க வேண்டும்’ என்பதைத்தான்.

‘2047-ல் இந்தியா 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருக்கும்’ என்கிற முழக்கம், கனவாகவே நின்றுவிடக் கூடாது!

- ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.