பொதுவாக மனிதருக்கும், நாய்க்கும் இடையே உணர்ச்சி ரீதியான தொடர்பு ஆதிகாலம் முதலே உள்ளது. நாய்கள் தங்களது முதலாளிகளுக்கு மிகவும் விசுவாசமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும். இதுபோன்று சமீபத்தில் நீண்ட காலமாக தொலைந்து போன நாய் ஒன்று தனது உரிமையாளரை கண்டுபிடிக்கும் நம்ப முடியாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரத்தின் நடுவே நாய் ஒன்று அங்கும் இங்குமாக ஓடி தனது உரிமையாளரின் வாசனையை உணர்கிறது. தனது உரிமையாளரின் வாசனை என்பதை உணர்ந்த நாய் வேகமாக ஒரு உணவகத்திற்கு உள்ளே செல்கிறது. அங்கே இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த உரிமையாளரை கண்டதும் பாய்ந்து உரிமையாளரை கட்டிப்பிடிக்கிறது.
அந்த சந்திப்பு ஒரு உணர்ச்சிமிக்க சந்திப்பாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் மற்றும் 16000 லைக்குகளையும் கடந்து வைரலாகி வருகிறது. இவ்வளவு பெரிய நகரத்தில் நாய் தனது உரிமையாளரின் வாசனையை வைத்து கண்டுபிடிப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இச்சம்பவம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஆழமான பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.