கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சந்தேகத்தால் ஒரு கணவன் தன் மனைவியை நடுரோட்டில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 35 வயதுடைய சாரதா என்ற பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை தன் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது அவரை சாலையில் வைத்து அவரின் கணவர் கிருஷ்ணப்பா வழிமறித்தார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் தன் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணப்பா அடிக்கடி மது குடித்துவிட்டு தன் மனைவியை நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்த நிலையில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் தகராறுகள் தொடர்ந்ததால் கடந்த சனிக்கிழமை அவர் தன் மனைவியை கொலை செய்துவிட்டார். கிருஷ்ணப்பாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.