இன்றைய தினம் (07/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமனை ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், திமுக கூட்டணியின் பலம், பலவீனம், 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகங்கள் தொடர் பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிசாமியின் அனுமதி பெற்றுதான் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்திக்கிறாரா? அனுமதி பெறாமல் சந்தித்தால் அவர் மீது ஏன் பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்? என அதிமுக கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்மலா சீதாராமனை ஏப்ரல் 5 ஆம் தேதி சந்தித்ததாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. இதற்கு சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை தெரிவிக்கின்றது.
"இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமனை சந்தித்திருந்தால், சந்தித்தேன் என்று தைரியமாக கூறியிருப்பேன். அதை சொல்வதற்கு எனக்கு என்ன பயமா? தயக்கமா? அவரை சந்தித்தால், சந்தித்ததாக கண்டிப்பாக நானே சொல்வேன். அதைவிடுத்து சீமான் மத்திய அமைச்சரை சந்தித்ததாக நீங்களே கற்பனை செய்துகொண்டால் நான் செய்யமுடியும், என்று கூறினார்", என்கிறது அந்த செய்தி.
பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை காவல்துரை கைது செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம்போல தனது வீட்டிலில் இருந்து ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர்", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர் என்கிறது அந்த செய்தி.
விசாரணையில் அந்த நபர், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான கார்த்திக் என்றும், அவர் ஒரு மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் என்றும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரியவந்தது என்று அந்த செய்தி கூறுகிறது.
சென்னை அம்பத்தூரில் தெருவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த 80 வயது முதியவரை மாடு ஒன்று திடீரென முட்டியதில், அவர் படுகாயமடைந்தார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"தெருவில் திரிந்து கொண்டிருந்த அந்த மாடு திடீரென ஆக்ரோஷமாகி, அருகில் நடந்து சென்று கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் முனுசாமி மீது மோதியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
அருகில் இருப்பவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவரது தலையில் 14 தையல்கள் போடப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை. பசுவின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்", என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கால்நடைகள் அடிக்கடி தெருவில் திரிவதும், அவர்களது உரிமையாளர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதும் தொடர்ந்து நடந்து வருவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி, இது குறித்த தனது அபராதத்தை உயர்த்தி இருந்தாலும், அது சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் கால்நடைகள் கட்டுப்பாடற்ற முறையில் நடமாடுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்", என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 11 ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலைய காவல்துறையினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். என்று அந்த செய்தி கூறுகிறது.
இதனைத தொடர்ந்து, ஐபிஎல் டிக்கெட்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில், தொடர்புடைய பட்டாபிராம் அரவிந்த (24), ஆலந்தூர் ரூபேஷ் (24), ஆவடி விஷ்ணு (19), கொளத்தூர் சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணி சந்திரன் (52), அசோக்நகர் ஸ்ரீராம் (25), கும்மிடிப்பூண்டி அரவிந்த (20), திருவொற்றியூர் சாலமன் (19), கேரள மாநிலத்தைச் சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் கார்த்திக் (23), கோட்டூர் மணிகண்டன் (26) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏஜென்டுகளாக செயல்பட்டுள்ளனர் என்று இந்து தமிழ் திசை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து கள்ளச்சந்தை மூலம் விற்பனை செய்ய வைத்திருந்த 34 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30,600 பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.
இலங்கையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
"கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பேசினார்.
அதில் அவர், "கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்து.
அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். கடமையில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது" என்றார்", என்று அந்த செய்தி கூறுகிறது.
"மேலும் அவர் அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் உயர்தர சிகிச்சை சேவைகளை வழங்குவது சுகாதார ஊழியர்களின் பொறுப்பாகும். இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பணிபுரிவதற்கு அவசியமான சூழலை அமைத்துத் தருவதுடன், தொழில்சார் ஏனைய உரிமைகளையும் வழங்க தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள அரச மருத்துவமனை வளாகத்தை பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சியான இடமாக மாற்ற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மிகவும் கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு அமைதியாக பயணித்து வரும் நாட்டின் சுகாதார சேவையை இன்றைய நிலைக்குக் கொண்டுவருவதில் மருத்துவமனை நிர்வாகம், விசேட மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வழங்கிய பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது பாராட்டை இத்தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான சூழலில் சுகாதாரத் துறையை சரியான திசையில் வழிநடத்த பங்களித்தவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார் அவர், என வீரகேசரி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது".
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.